யானை மதம் பிடித்தால் என்ன நடக்கும் என்றே தெரியாது. எவ்வளவுதான் பாசமாக இருந்தாலும் மிருகம் மிருகமே. அதற்கு பெல்லன்வில விமலரத்ன தேரரின் சம்பவம் சிறந்த உதாரணமாகும். யானை மதம் பிடித்து தாக்கியதினால் பெளத்த பிக்கு உயிரிழந்தாரா? அல்லது யானை தள்ளிவிட்ட பின்னர் காயமடைந்து சிகிச்சை பெற்ற போது மாரடைப்பால் உயிரிழந்தாரா? என்பது அனைவரினதும் குழப்பமாக உள்ளது. பெல்லன்வில பிக்குவிற்கு நடந்தது என்ன? என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பெல்லன்வில விகாரைக்கு சென்று பல தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்தது.
பெல்லன்வில விமலரத்ன தேரர் மிகவும் சிறந்தவரும் பண்பானவரும் ஆவார். அதுமாத்திரமின்றி இன நல்லிணக்கத்திற்காகவும் பெரும் பாடுபட்ட பெளத்த பிக்குகளில் ஒருவராவார். சர்வமத பேரவையை உருவாக்கி தனது நாட்டின் அமைதி போக்கிற்கு பெரும் வித்திட்டவரே பெல்லன்வில அமிர தேரராவார். பெளத்த மத பக்தர்களின் எதிர்ப்பினையும் துச்சமாக மதிக்காமல் நல்லிணக்கத்திற்காக செயற்பட்டார்.
இதன்படி இப்படியான பண்பான பிக்கு ஒருவருக்கு நேர்ந்த கதை கவலைக்குரியதாகும். என்ன நடந்தது என்பது தொடர்பில் தேடுவதற்கு நாம் பெல்லன்வில விகாரைக்கு சென்று உண்மை நிலைவரத்தை கேட்டறிந்தோம். எனினும் விகாரை நிர்வாகம் உண்மையான சம்பவத்தை மறைப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
எனினும் பெளத்த விகாரை நிர்வாகம் கூறும் கதை என்ன என்பதனையும் அவதானிக்க வேண்டும். இதன்படி யானையை வளர்ப்பவர் விடுமுறையில் சென்றுள்ளமையினால் பெல்லன்வில விமல ரத்ன தேரர் யானை இருக்கும் இடத்திற்கு சென்று யானையின் நீண்ட கொம்பை பிடித்துக்கொண்டு வாழைப்பழத்தை வழங்கியுள்ளார். இதன்போது யானை பலமான முறையில் தலையை ஆட்டியுள்ளது. இதனால் பெல்லன்வில விமலரத்ன தேரர் வீசப்பட்டு சென்று தரையில் இருந்த கல்லில் அடிபட்டு கடுமையான காயத்திற்கு உள்ளாகி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து எலும்பு கடுமையாக தாக்கப்பட்டுள்ளமையினால் சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கிய போதும் அந்த சத்திர சிகிச்சைக்கான வசதிகள் களுபோவில வைத்தியசாலையில் இல்லாதமையினால் உடனே ஆசிரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன்போது சத்திர சிகிச்சை முடிவடைந்த பின்னர் மாரடைப்பினால் உயிரிழந்ததாக பெல்லன்வில விகாரை நிர்வாகம் குறிப்பிட்டது.
எனினும் பெல்லன்வில விகாரை நிர்வாகம் கூறும் கதைக்கு மாற்றமாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி தெரியவந்த தகவலின் பிரகாரம் பெல்லன்வில விமலரத்ன தேரர் யானைக்கு வாழைப்பழம் வழங்க சென்ற போது யானையின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உடலின் எலும்புகள் சிதைவடைந்துள்ளதாகவும் இதனால்தான் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல்கள் பரவலாக நாடுபூராகவும் பரவி வருகின்றது. யானை மதம் பிடித்து தாக்கியது உண்மையான தகவலா என்பதில் சந்தேகம் உள்ளது.
இதன்பிரகாரம் பெல்லன்வில விகாரையின் நிர்வாகத்தினரும் பெல்லன்வில நலன்புரி மன்றத்தின் உப தலைவருமான அத்தபத்து தேரரிடம் வினவிய போது,
பெல்லன்வில விமல ரத்ன தேரரின் மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகின்றனர். எனினும் அதில் உண்மையில்லை. நாம் எதனையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. பெல்லன்வில விகாரையின் சொந்த செலவினால் மியன்மாரில் இருந்து குறித்த யானை சுமார் எட்டு வருடத்திற்கும் முன்னர் இங்கு கொண்டு வரப்பட்டது. இதன் பெயர் மியன்மார் ராஜாவாகும். இந்த யானை பெல்லன்வில விமலரத்ன தேரருடன் பாசத்துடன் நடந்துகொள்ளும். அதேபோன்றுதான் தேரரும் யானையுடன் மிகவும் பாசம் கொண்டவராவார். இதன்போது யானை வளர்ப்பவர் விடுமுறைக்கு சென்றமையினால் தேரர் யானைக்கு வாழைப்பழத்தை வழங்க முற்பட்ட போது யானை தனது தலையை பலமாக ஆட்டியதன் காரணமாக யானை கொம்பினை பிடித்திருந்த தேரர் விழுந்து கடுமையான காயத்திற்கு உள்ளாகியதன் பின்னர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு சத்திர சிகிச்சைக்கான இயந்திரம் இல்லாமையினால் தேரர் ஆசிரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். களுபோவில பிரேத பரிசோதனை அறிக்கையிலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஊடகங்களின் ஊடாக வெளிவந்த தகவலின் பிரகாரம் யானை கடுமையாக தாக்கி மிதித்திருந்தால் தேரரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டியதில்லை. அப்படியானால் தேரர் உடனே உயிரிழந்திருப்பார். காப்பாற்ற முடியாமல் போயிருக்கும். ஏனெனில் யானை மதம்பிடித்தால் உடனே காலால் மிதிப்பது யானையின் சுபாவமாகும். ஆனால் மியன்மார் ராஜா அப்படி செய்யவில்லை. இதுதான் உண்மையாகும் என்றார்.
எவ்வாறாயினும் பிரேத பரிசோதனையில் மாரடைப்பு என்றே கூறப்பட்டுள்ளது. ஆகவே சான்றுப்படுத்தப்பட்ட உண்மையினை நம்பித்தான் ஆகவேண்டும். எனினும் பெல்லன்வில விமலரத்ன தேரர் பண்புமிக்க ஒருவராவார். சிறந்த கல்வி அறிவினைக் கொண்ட பிக்குவாவார். உயிரிழக்கும் வரையும் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியாக சேவை புரிந்தார். இந்த சந்தர்ப்பத்தில் இவர் எப்படிப்பட்டவர். இவரது வரலாற்றை பற்றியும் கூறித்தான் ஆகவேண்டும்.
பெல்லன்வில தேரரின் வரலாறு
1942 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி பிறந்து பெல்லன்வில விகாரையில் துறவியானார். பெல்லன்வில ஸ்ரீ சோமரத்ன தேரர் அன்னாரின் ஆசானாகும். இவர் தனது ஆரம்ப கட்ட பிக்கு கல்வியினை வாத்துவ மொல்லிகொட பிரவஜனோதய பிரிவென்னில் கற்றார். உயர் பிரிவென் கல்வியை பேலியகொடை வித்தியாலங்கார பிரிவென்னில் பயின்றார். பிரிவென் கல்வியின் பின்னர் களனி பல்கலைக்கழகத்தில் பிரதான பட்டத்தை பெற்றுக்கொண்டார். அதன்பின்னர் கெளரவ பட்டத்தை ஜயவர்தன பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார். இந்த காலப்பகுதியில் ஆசிரியராக இரத்மலானை பிரிவென் ஆசிரிய பயிற்சி வித்தியாலயத்தில் கடமையாற்றினார். அதன்பின்னர் இங்கிலாந்து சென்று லென்கெஸ்டர் பல்கலைக்கழகத்தில் பயின்று கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டார். இந்த பட்டத்தை பெற்ற பின்னர் மீண்டும் இலங்கைக்கு வருகை தந்தார். அதன்பின்னர் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றினார். பாளி, பெளத்த பீடத்திலேயே பேராசிரியராக இருந்தார். அதன்பின்னர் சில காலப்பகுதியின் பின்னர் பீடத்தின் பிரதானியாக மாறுகின்றார். அந்த காலப்பகுதியின் போது பெல்லன்வில விகாரையினதும் அருகில் உள்ள கிராம விகாரைகளுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்தார். அதுமாத்திரமின்றி இலங்கை பூராகவும் தொடர்புகளை வைத்திருந்தார். தேசிய நடவடிக்கைகள், கல்வி, கலாசார செயற்பாடுகளில் தைரியமாக செயற்பட்டார். இதன்போது பெல்லன்வில சோமரத்ன தேரர் உயிரிழந்ததையடுத்து பெல்லன்வில விகாரா திபதியாக பெல்லன்வில விமலரத்ன தேரர் நியமிக்கப்பட்டார்.
இவர் விகாராதிபதியான பின்னர் பெல்லன்வில எசல பெரஹராவின் வேலைத்திட்டங்களை திட்டமிட்டு முன்னெடுத்து சென்றார். அத்துடன் பெல்லன்வில விகாரையுடன் சம்பந்தப்பட்ட அமைப்புகள், இளைஞர் சங்கம் போன்ற இயக்கங்கள் இருந்தன. இதனுடன் நெருங்கிய தொடர்பினை வைத்து நாடுபூராகவும் தனது சேவையை முன்னெடுத்தார். பாடசாலை மாணவர்களுக்காக 1980 ஆம் ஆண்டளவில் பெல்லன்வில பிரஜா அபிவிருத்தி மன்றத்தை ஆரம்பித்தார். இதன் உதவியுடன் தொழில்நுட்பவியல் கல்லூரிகளை ஆரம்பித்தார். இதில் 12 பாடவிதானங்கள் உள்ளன. இந்த மன்றத்தில் தற்போது வரைக்கும் அவரே தலைவராக செயற்பட்டார்.
இந்த மன்றத்தின் உதவியுடன் மருத்துவ முகாம்களை நடத்தியதுடன் இலவச மூக்கு கண்ணாடி வழங்கியும் வந்தார். மருந்துகளையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்தார். அத்துடன் விகாரைக்கு என்று வாகன தரிப்பிடம் ஒன்றை நிர்மாணித்து அதில் இருந்து வரும் வருமானத்தை சத்திர சிகிச்சைக்காக அன்பளிப்பு செய்தார். அத்துடன் இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட போதும் உதவியும் செய்துள்ளார். சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது அம்பலாங்கொடை பகுதியில் ஒரு கிராமம் ஒன்றையும் உருவாக்கி வீடுகளை நிர்மாணித்து விகாரையொன்றையும் திறந்து வைத்தார்.
அத்துடன் மதம், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சர்வமத பேரவையை ஆரம்பித்தார். இதில் அனைத்து மதத்தலைவர்களும் அங்கம் வகிக்கின்றனர். இதன்போது ஹலால் பிரச்சினை ஏற்பட்ட போது பெல்லன்வில விகாரைக்கு முஸ்லிம்களை அழைத்து பிரச்சினைக்கு தீர்வு வழங்கினார். யாழ்ப்பாணத்திற்கும் அவர் சென்றுள்ளார். இதன்போது அந்த பகுதியில் பெளத்தர்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு ஏற்பட்ட போதும் அதனை துச்சமாக மதிக்காமல் செயற்பட்டார். அத்துடன் நாடு பிளவுபடுத்தாமல் இருக்க கண்ணும் கருத்துமாக செயற்பட்டார். மேலும் அரசியலமைப்புக்கும் அவர் எதிர்ப்பினை வெளியிட்டார். மனதில் உள்ளதை மறைக்காமல் வெளிப்படையாக எதனையும் அச்சமில்லாமல் கூறுவார். மேலும் நாட்டு தலைவர்களுக்கும் இடைக்கிடையே உபதேசங்களை வழங்குவார். மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்கு அதிகளவில் குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவராகும். அத்துடன் சர்வதேச பெளத்த சம்மேளனத்தின் செயலாளராகவும் கோட்டை சங்க சம்மேளனத்தில் தலைவராக தற்போது வரைக்கும் செயற்பட்டு வந்துள்ளார். உலக தலைவர்கள் பலருடன் இவர் தொடர்பினை வைத்துள்ளார். எனவே இவரது இழப்பு நாட்டுக்கு மாத்திரமல்ல சிறுபான்மை இனத்தவர்களுக்கும் பேரிழப்பாகும்.
இறுதி கிரியை ஏற்பாடுகள்
இந்நிலையில் பெல்லன்வில விமலரத்ன தேரரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக பெல்லன்வில விகாரையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆகியோரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிலையில் இவரது இறுதி கிரியைகள் இன்று 8 ஆம் திகதி ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைகழக மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM