பலத்த பாதுகாப்பையும் மீறி இலங்கையிலிருந்து தனுஷ்கோடி சென்ற குடும்பத்தார்களிடம் பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. 

தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கடல் பகுதியில், இன்று (8) அதிகாலை பலத்த பாதுகாப்பையும் மீறி  இலங்கையின் மன்னார் பகுதியிலிருந்து ‘ஃபைபர்கிளாஸ்’ படகில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரிடம் உளவுத்துறை, கியூ பிரிவு, சுங்கத்துறை மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன்னார் பகுதியைச் சேர்ந்த நிரோஷன் (28), ஒன்பது மாத கர்ப்பிணியான அவரது மனைவி மேரிஸ்டெல்லா (23), அவர்களது குழந்தை ஜெஸ்மின் (5) மற்றும் சகோதரர் ரீகன் ஆகியோரே இவ்வாறு தனுஷ்கோடி சென்றவர்களாவர்.

யுத்த காலப் பகுதியில், 1990ஆம் ஆண்டு மண்டபம் முகாமில் அகதிகளாகத் தங்கியிருந்த இவர்கள், 2012ல் பாஸ்போர்ட் மூலம் இலங்கை திரும்பியுள்ளனர்.  

இங்கு வர்ணப்பூச்சு வேலைகளில் ஈடுபட்டு வந்த நிரோஷன், குடும்பச் செலவுக்குப் போதிய பணம் இன்றித் தவித்து வந்ததாகவும் மனைவி குழந்தை பிரசவிக்க இருக்கும் நிலையில், மீண்டும் அகதி முகாமுக்கே சென்றுவிடத் தீர்மானித்து அறுபதாயிரம் ரூபா பணம் செலுத்தி தனுஷ்கோடிக்கு படகில் சென்று சேர்ந்ததாகவும் நிரோஷன் தெரிவித்துள்ளார்.

கடவுச் சீட்டுகளின்றி சட்ட விரோதமாக நாட்டினுள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் நான்கு பேரும் இராமேஸ்வரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.