(ஆர்.யசி)

உதயங்க  வீரதுங்கவிற்கும் கோத்தாபய ராஜபக் ஷவிற்கும்  தொடர்புகள் உள்ளன என்ற சந்தேகம் எழுகின்றது. விசாரணைகளை முன்னெடுத்து உண்மைகளை கண்டறிய வேண்டும் என விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

மக்கள்  விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில். 

குமரன் பத்மநாதன் விடயத்தை போன்றே உதயங்க வீரதுங்கவின்  குற்றமும் மூடிமறைக்கப்பட்டு விரையில் சுதந்திரமாக நடமாடுவார். 

இவர்களின் கைதுகள் அனைத்தும் கண்துடைப்பு நாடகம். இன்று நாட்டின் பிரதான கோசமாக ஊழலை ஒழிப்போம் என்ற கோசமே காணப்படுகின்றது. 

இதில் மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்தில் இருந்தே பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. 

உதயங்க வீரதுங்க விடயத்தில் இன்று கோதாபய ராஜபக் ஷ அவசரப்பட்டு கருத்து தெரிவித்து வருகின்றார். இத்தனை  காலமாக உதயங்க விடயத்தில் கருத்து முன்வைக்காக கோத்தாபய ராஜபக்ஷ இன்று உதயங்கவின் கைதின் பின்னர் வாய் திறக்கின்றார். இந்த கால கட்டத்தில் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் தான் இருந்தார். உதயங்க வீரதுங்கவும் அமெரிக்கவிற்கு தப்பி செல்லவே முயற்சித்துள்ளார். ஆகவே இவை அனைத்தின் பின்னணியிலும் தொடர்பு இருக்கலாம். விசாரணைகளை மூலமாக  கண்டறியுங்கள்.  எவ்வாறு இருப்பினும்  குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நிதி ஊழல் குற்றவாளிகள், கொலையாளிகள், கொள்ளைக்கார்கள் என அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.