உயர்ந்த ‘ஓக்’ மரம் ஒன்றை வெட்டிய தச்சர்கள் சிலர், இருபது வருடங்களுக்கு முன் எதேச்சையாக அந்த மரத்தில் சிக்கிக்கொண்ட நாயின் உயிரற்ற உடல் எவ்வித சேதமுமின்றி இருக்கக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

‘ஸ்டக்கி’ என்று பெயரிடப்பட்ட இந்த நாய் அமெரிக்காவின் ஜோர்ஜியாவைச் சேர்ந்தது. 1980ஆம் ஆண்டு இந்த நாய் காணாமல் போனது. 

பிராணி ஒன்றைத் துரத்திச் சென்றபோது இந்த நாய், குறித்த மரத்தினுள் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஓக் மரத்தில் கசியும் ஒரு வித அமிலமானது அதன் சுற்றுப்புறத்தை ஈரப்பதன் அற்றதாக வைத்துக்கொள்ளும் என்பதால், சிக்கிக்கொண்ட ஸ்டக்கியின் தோலும் காய்ந்து கடினத்தன்மை பெற்றிருக்கிறது என்று, அதை ஆராய்ந்த வனத் துறையினர் கூறியுள்ளனர்.

மரத்தின் உட்பகுதியில் ஈரப்பதன் மிகக் குறைவாக இருந்ததால், உயிரற்ற உடலில் இடம்பெறும் பௌதீக மாற்றமும் நிகழாமல், ஸ்டக்கியின் உடல், அமைப்பு ரீதியாக எவ்வித சேதமும் இன்றிக் கிடைத்திருப்பதாகத் தெரிவித்தனர்.

இந்த ஸ்டக்கி மரத் துண்டு தற்போது ஜோர்ஜியாவின் ‘வன உலகம்’ என்ற நூதன சாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.