இரண்டு பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற ஜீப் வண்டி ஒன்று இன்று காலை 7.30 மணியளவில் நுவரெலியா நகர மத்தியில் விபத்துக்குள்ளாகியதில் நுவரெலியா நகரத்திற்கு மூன்று மணித்தியாலய மின்சார தடை ஏற்பட்டிருந்தது.

குறித்த ஜீப் வண்டியில் இரண்டு பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வேளையில் நுவரெலியா பூங்கா வீதியில் வைத்து சாரதிக்கு தீடிரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததனால் தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு எதிரே இருந்த அதிக வலு கொண்ட மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் ஜீப் வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதோடு நுவரெலியா நகரத்திற்கான மின்சார தடையும் ஏற்பட்டிருந்தது. இதனை சீர்செய்வதற்கான நடவடிக்கையில் மின்சார சபை ஊழியர்கள் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.

எனினும் விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதோடு தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளமையும் குறிப்பிடதக்கது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.