19 வயதிற்குட்பட்டோருக்கான இளையோர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4 ஆவது முறையாகக் உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.

நியூஸிலாந்தின் பே ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

துடுப்பாட்டத்தை தெரிவுசெய்த அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்பம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. அந்த அணி 59 ஓட்டங்களைப் பெறுவதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. 

இந்திய அணியின் இஷான் பரோல் மற்றும் கமலேஷ் நகர்கோட்டி ஆகியோர் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களுக்கு கடும் நெருக்கடிகொடுத்தனர். 

இதையடுத்து, 4 ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த உப்பல் மற்றும் மெர்லோ ஜோடி, அவுஸ்திரேலிய அணியைச் சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இந்த ஜோடி, 4 ஆவது விக்கெட்டுக்கு 75 ஓட்டங்களை சேர்த்திருந்த நிலையில், 34 ஓட்டங்களுடன்  உப்பல் ஆட்டமிழந்து வெளியேறினார். 

அடுத்து வந்த மெக்ஸ்வீனி, 23 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் சிறப்பாக ஆடி மெர்லோ அரை சதம் அடித்தார். 

இதனால், அவுஸ்திரேலிய அணி 250 ஓட்டங்களை கடந்துவிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், மெர்லோ 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அவுஸ்திரேலிய அணியின் ஓட்டக்குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, சிறப்பாகப் பந்துவீசிய இந்திய அணி, 47.2 ஓவர்களில் 216 ஓட்டங்களுக்குள் அவுஸ்திரேலிய அணியை ஆட்டமிழக்கச் செய்தது.

இதையடுத்து, 217 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு அணித் தலைவர் பிரித்வி ஷா, மன்ஜோத் கல்ரா ஜோடி சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்தது.  முதல் விக்கெட்டுக்கு 71 ஓட்டங்ளக் சேர்த்த நிலையில், 29ஓட்டங்களுடன் பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். 

அடுத்துவந்த அதிரடி வீரர் சுப்மன் கில், 31 ஓட்டங்களுடன் வெளியேறினார். இந்தத் தொடரில் துடுப்பாட்டத்தில் ஜொலித்த சுப்மன் கில், முதல்முறையாக 50 ஓட்டங்களுக்கு  குறைவான ஓட்டங்களுடன் இன்று ஆட்டமிழந்து வெளியேறினார். 

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரம்ப வீரர் கல்ரா, சதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த வெற்றி இலக்கை இந்திய அணி, 38.5 ஓவர்களில் எட்டியது. கல்ரா 101 ஓட்டங்களுடனும் அவருக்கு ஒத்துழைப்புக் கொடுத்த ஹர்விக் தேசாய் 47 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 

இந்தத் தொடரில்,  இந்திய அணி, பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியைச்  சந்திக்காமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. முன்னதாக, லீக் சுற்றில் இந்திய அணி 100 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.