பன்னிரண்டு வருடங்களுக்கு முன் ‘காணாமல் போன’ செய்மதியொன்றை ஆரம்ப நிலை வானிலை ஆய்வாளர் ஒருவர் ‘கண்டுபிடித்து’ அசத்தியுள்ளார்.

பூமியைச் சுற்றிலும் ஒரு காந்தக் கடல் பரவியிருக்கிறது. ஆனால், அதைக் கண்ணால் காண முடியாது. சூரியனில் இருந்து வெளிவரும் கடும் வெப்பக் காற்று பூமிக்குள் ஊடுருவாமல், அதன் ஒளி மட்டும் பூமியை வந்தடையச் செய்யும் ஒரு வடிகட்டியாக இந்தக் காந்தக் கடல் இயங்குகிறது.

எனினும் மிகையான காந்தப் புலத்தைக் கொண்ட இந்தக் கடலில் அவ்வப்போது எழும் இராட்சத காந்த அலைகள், அதன் அருகாமையில் உள்ள செய்மதி உள்ளிட்ட மின்னியல் உபகரணங்களைப் பாதித்துவிடவும் வாய்ப்பு உண்டு.

எனவே, அதை ஆராய்வது எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு அவசியம் என்பதால், இமேஜ் என்ற செய்மதியை 2000ஆம் ஆண்டு நாஸா விண்ணில் செலுத்தியது.

இமேஜின் முக்கிய பணி, கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடலில் எழும் இராட்சத காந்த அலைகளைப் படம் பிடித்து அனுப்புவதே! இதன்மூலம், காந்த அலைகள் எந்தக் காலத்தில் வீசுகின்றன என்பதை அனுமானிக்க முடியும்.

விண்ணில் நிலைகொண்ட இமேஜ், விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்புக்கு இணங்க, அந்தக் காந்தக் கடலைப் படம் பிடித்து அனுப்ப ஆரம்பித்தது. அதில், விஞ்ஞானிகள் அறிந்திராத பல உண்மைகள் வெளியாகின.

அதாவது, பூமியில் கோடை காலம் நிலவும்போது, அந்தக் காந்தக் கடலில் இராட்சத அலைகள் எழுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதை விட ஆச்சரியமானது என்ன தெரியுமா? அந்த அலைகள் பூமியை வந்து அடைவதைத் தடுப்பதற்காக, சுமார் ஒரு இலட்சம் வோட்ஸ் அலகு கொண்ட மின் துகள்களை பூமி தானாகவே விண்ணை நோக்கிப் பாய்ச்சியதே!

இந்த வேளையில், 2005ஆம் ஆண்டு, அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஈராக் போரை முடிவுக்குக் கொண்டுவரப்போவதாக அறிவித்த அதே தினத்தன்று, இமேஜுக்கும் நாஸாவுக்குமான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. 

ஒரு மாத காலமாக அதைத் தேடிப் பார்த்து சலித்துப் போன நாஸா, வெற்றிகரமான தமது ஆய்வு முயற்சி முழுமையடையாமலேயே நிறைவடைந்ததாக அறிவித்தது.

இந்த நிலையில், கடந்த ஏழாம் திகதி தனியார் விண்வெளி ஆய்வு நிலையம் ஒன்று ‘ஸுமா’ என்ற ஒரு செய்மதியை விண்ணுக்கு அனுப்பியது. இச்செய்மதி எங்கிருந்து, எதற்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து யாருக்கும் தெரியாது. எனினும் அனுப்பப்பட்ட சில நிமிடங்களில் அதுவும் காணாமல் போனது.

ஸுமாவுக்கு என்ன ஆகியிருக்கும் என்று அறிந்துகொள்ள, ‘ஸ்கொட் டில்லி’ என்ற கனேடிய ஆரம்ப நிலை வானியல் ஆய்வாளருக்கு ஆர்வம் ஏற்பட்டது. தனக்குத் தெரிந்த வழிமுறைகளில் ஸுமாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார் டில்லி!

இதற்காக, உலககெங்கும் உள்ள அவரைப் போன்ற ஆரம்ப நிலை வானியலாளர்களையும் இணைத்துக்கொண்டார்.

விண்ணில் உலவும் செய்மதிகளைக் கண்ணால் - அதாவது, அவற்றை தொலைநோக்கியோ அல்லது வேறெந்த காட்சி உபகரணத்தைப் பயன்படுத்தியோ - தேடாமல், காதால் - அதாவது, அவற்றின் ஒலியலைகளை வைத்து - தேடிக் கண்டுபிடிக்கத் தொடங்கினார்.

இதன்போது, தீர்க்கமான ஒரு ஒலி சமிக்ஞையை டில்லி பெற்றுக்கொண்டார். முதலில் அதை அவர் அலட்சியப்படுத்தியபோதும் தொடர்ந்து அந்த சமிக்ஞை அவருக்குக் கிடைக்கவே, அது என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்தார்.

அப்போதுதான், இமேஜ் குறித்த நாஸாவின் அறிக்கையை அவர் காண நேர்ந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த தரவுகளுக்கும் தான் கண்டுபிடித்த தரவுகளுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த டில்லி, தனது ஆய்வை அறிக்கையாக்கி நாஸாவுக்கு அனுப்பி வைத்தார்.

அதைக் கண்டு வியந்த நாஸா, பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பின், அது இமேஜின் சமிக்ஞைகள் தாம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன்மூலம், தொலைந்துபோன இமேஜ் பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் மீளக் கிடைத்துள்ளது. விரைவில், காந்தப் புலக் கடலின் படங்களை இமேஜில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.