அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்வதற்காக பௌத்த தேரர்களை உசுப்பேற்றி இன ஒற்றுமையை சீர்குலைக்க மஹிந்த ராஜபக் ஷ முயற்சிக்கிறார் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமை காரியாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்,
அதிகாரத்தில் இருந்து பழகிப்போன மஹிந்த ராஜபக் ஷவுக்கு அதிகாரம் இல்லாமல் போன நிலையில் எவ்வாறாவது அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இன ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். குறிப்பாக ராவணாபலய, சிங்ஹலே என பௌத்த தேரர்களை உள்ளடக்கிய அமைப்புகளை உருவாக்கி இன ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிக்கின்றார்.
மஹிந்த ராஜபக் ஷ இரண்டாவது தடவையாகவும் அதிகாரத்துக்கு வந்தவுடன் 18ஆவது திருத்தத்தை கொண்டுவந்து 3ஆவது தடவையாகவும் அதிகாரத்துக்கு வரும் வகையில் சட்டத்தை மாற்றியமைத்தார். அவருக்கு எந்தளவுக்கு அதிகார மோகம் இருந்ததென்றால், தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு மேலும் ஒரு
வருடகாலம் இருக்கும் நிலையில் தேர்தலை நடத்தி தனது பதவியை உறுதிப்படுத்திக் கொள்ள முற்பட்டார். ஆனால் மக்கள் அதற்கு இடமளிக்கவில்லை.
ஆனால் மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்தவுடன் 19ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்து நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமற்செய்து பாராளுமன்றத்துக்கு கூடுதலான அதிகாரத்தை பெற்றுக்கொடுத்தார். அத்துடன் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தேவையான தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து வருகிறார். இதன் காரணமாக சர்வதேசத்துக்கும் எமது நாடுமீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இருக்கும்போது நீதிமன்றங்கள் சுயாதீனமாக இயங்க முடியவில்லை. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரத்தை தனக்குக்கீழ் மஹிந்த எடுத்துக் கொண்டார். இன்றும் அவர் ஜனாதிபதி போன்றே செயற்பட்டு வருகின்றார். நீதிமன்ற நடவடிக்கைகளை கேள்விக்குட்படுத்தி வருகின்றார்.
கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை நிறுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்கவே மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கினார்கள். 2010ஆம் ஆண்டுமுதல் 2015 ஜனவரி 8ஆம் திகதி வரை இருந்துவந்த வீண்விரயங்கள் தற்போது இல்லாமல் செய்யப்பட்டுள்ளன.
கடற்படை அதிகாரியாக இருக்கும் ஒருவருக்கு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அமைப்பதற்கு எவ்வாறு முடிந்தது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதற்காகவா அவர் தனது மகனை இராணுவத்துக்கு வழங்கினார் என்று கேட்கின்றோம். குற்றமிழைத்தவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். இது தொடர்பான விசாரணைகள் மந்தகதியிலேயே நடைபெறுகின்றன. ஒருவரை கைதுசெய்து சிறையிலடைத்ததன் மூலம் இது முடிவடைவதில்லை. அதேபோன்று லசந்த விக்ரமதுங்க, எக்னெலிகொட மற்றும் தாஜுதீன் கொலைகள் தொடர்பிலும் விசாரணைகள் தொடரவேண்டும்.
ஆனால் ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக சர்வதேசம் எங்கள்மீது நம்பிக்கை வைத்து வருகின்றது. அதன் காரணமாகவே சவூதியில் எமது பெண்ணொருவருக்கு கல்லெறிந்து கொலை செய்வதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் அவரது தண்டனை குறைக்கப்பட்டது.
எனவே பௌத்த தேரர்களை ஏவி சகல இன மக்களும் ஒற்றுமையாக இருப்பதை சீர்குலைத்து விட்டு மீண்டும் அதிகாரத்துக்குவர முயற்சிக்கும் மஹிந்தவின் நடவடிக்கையானது நாட்டில் மீண்டும் இனப்பிரச்சினை ஏற்படுவதற்கே வழியமைக்கப்படும். அத்துடன் சர்வதேசத்திலும் எமக்கு அபகீர்த்தியே ஏற்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM