வாரியப்பொல ரபுகன பிரதேசத்தில் வைத்து கள்ள நோட்டுகளுடன் சந்தேகநபர்கள் இருவர், வாரியப்பொல பொலிஸ் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சுந்தரகம அவுளேகம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஆண்ணொருவரும், பானாகெதர அவுளேகம பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஆணொருவருமேயாவார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வாரியப்பொல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உபபொலிஸ் பரிசோதகர் எச்.எம்.ஏ.ஆர்.கே. ஹேரத்தின் வழிக்காட்டலின் கீழ் வாரியப்பொல பொலிஸ் குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 1000 ரூபா பெறுமதியான கள்ளநோட்டுகள் ஐந்தும், 1 கிராம் 120 மில்லிகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இதுபோல் வேறு நாணயத்தாள்கள் உள்ளனவா மற்றும் இவர்களுடன் தொடர்புடைய குழுக்கள் இருக்கின்றனவா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நேற்று வாரியப்பொல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியப்பொல பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.