வவுனியாவில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய இளைஞனுக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வவுனியா மகாறம்பைக்குளம் சிறீராமபுரம் பகுதியில் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் 27 வயது இளைஞன் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி சிறீராமபுரம் எனும் இடத்தில் ஒரே ஊரைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில் சிக்கன் திருச்செல்வம் என்பவருக்கு மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டிற்காக சிறீராமபுரம் பிரதேசத்தை சேர்ந்த மூவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் 02 ஆம் திகதி சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இந்த எதிரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணைகள் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இடம்பெற்று வந்ததுடன் வழக்குத் தொடுனர் தரப்பில் வழக்கினை அரச சட்டவாதி ஐ.எம்.எம்.பாகிம் நெறிப்படுத்தியிருந்தார்.

இந்த வழக்குடன் தொடர்புடைய எதிரிகளான இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவ்விருவரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதுடன், முதலாம் எதிரி தாக்கியதால்தான் மரணம் சம்பவித்துள்ளது என்பது சந்தேகத்திற்கப்பால் நிரூபிக்கப்பட்டு வழக்கில் முதலாம் எதிரிக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.