பிரதியமைச்சர் சரண குணவர்தன மீது பிடியாணை பிறப்பித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் 2006 முதல் 2008ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அபிவிருத்தி லொத்தர் திணைக்களத்தின் தலைவராக சரண குணவர்தன பதவி வகித்தார்.

அப்போதைய தனது பதவிக் காலத்தில், திணைக்களத்தின் வாகனங்களை சட்டவிரோதமாக வாடகைக்கு விட்டதன் பேரிலேயே இவர் மீது மனு அளிக்கப்பட்டிருந்தது.

மேலும் அரசுக்குச் சொந்தமான அதிசொகுசு வாகனங்களையும் இவர் முறைகேடாகப் பயன்படுத்தியதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து இலஞ்ச, ஊழல் தடுப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது, பிரதியமைச்சர் நீதிமன்றுக்குச் சமுகமளிக்கத் தவறியதையடுத்தே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.