“வரப்பிரசாதங்களைப்பெற்று தமிழர்களுக்கு துரோகமிழைத்தனர் கூட்டமைப்பினர் : விரைவில் வெளிப்படுத்துவேன்”

Published By: Priyatharshan

30 Jan, 2018 | 05:56 PM
image

முன்னைய அரசாங்கத்திடம்   வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டு  தமிழ்  மக்களுக்கு கூட்டமைப்பினர்  செய்த   சேதம் எமக்குத் தெரியும்.   கூட்டமைப்பினர்  பெற்ற வரப்பிரசாதங்கள் குறித்து நான்  எதிர்காலத்தில் வெளிப்படுத்துவேன்.   அது  தெரிந்தால் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களுக்கு அந்த  வடக்கு கிழக்கு  மாகாணங்களுக்கு போகவும்   முடியாது.   தமது பிள்ளைகளுக்கு  வெ ளிநாடுகளில் வீடுகளை பெற்றுக்கொடுத்தமை  அவர்களுக்கு கல்வி சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுத்தமை என்பன  எமக்கு  தெரியும்.  அவற்றை நான் நேரம் வரும்போது கூறுவேன் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிதிநிதியும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

செவ்வியின் முழு விபரம் வருமாறு

கேள்வி       ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கை என்ன?

பதில்          இதில் நாங்கள் மக்களுக்கு கூறுவது, இந்த தேர்தலை அரசாங்கம் தொடர்பான உங்கள் கருத்துக் கணிப்பாக பயன்படுத்துங்கள் என்பதாகும். அரசாங்கம் வடக்கு மற்றும் தெற்கிற்கு வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அரசாங்கம் நன்றாக மக்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்று கருதினால் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கலாம். இல்லை. அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கருதினால் எமக்கு வாக்களிக்கலாம். முடிவு மக்களின் கைகளில் உள்ளது. இது தான் எமது பிரதான கருப்பொருளாக இருக்கின்றது.

ஆனால் இங்கு ஒருவிடயத்தை கூறவேண்டும். தமிழ் மக்கள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கு பாரிய சேவையாற்றினார். குறிப்பாக சமாதானத்தை கொண்டு வந்தவர் அவரேயாவார். சைனட் குப்பியை கழுத்தில் மாட்டிச் சென்ற பிள்களைகள் புத்தகப் பையை சுமக்கும் நிலையை உருவாக்கினார். அச்சம் சந்தேகமின்றி மக்கள் வாழும் நிலையை உருவாக்கினார். சோதனை சாவடிகளை அகற்றினோம். 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். யாழ். தேவியை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்றோம். ஏ 9 வீதியை திறந்தோம். சங்கப்பிட்டி பாலத்தை அமைத்தோம். அபிவிருத்தியை முன்னெடுத்தோம். விவசாய உற்பத்திகளை முன்னேற்றினோம்.

சில விடயங்களை படிப்படியாக செய்து கொண்டு வந்தோம். ஆனால் அவற்றை விட அதிகமாக செய்வதாக கூறியே நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது. விசேடமாக அரசியல் தீர்வை வழங்குவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் மூன்று வருடங்கள் கடந்தும் இதுவரை அது தொடர்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக எமது அரசாங்க காலத்தில் முன்னெடுத்த அபிவிருத்திப் பணிகளும் இடைநிறுத்தப்பட்டன. நாம் கொண்டு வந்த சமாதானம் தற்போது படிப்படியாக மாற்றம் அடைகிறது. தேசிய ஒற்றுமையே இங்கு முக்கியமாகும்.

அந்நியோன்ய நம்பிக்கை அவசியம். காரணம் இனங்களுக்கிடையில் சந்தேகம் ஏற்பட்டுவிட்டால் அது பாரிய பிரச்சினையாகிவிடும். நாங்கள் அந்த சந்தேகத்தை துடைத்தெறிந்தோம். ஆனால் இந்த அரசாங்கம் மீண்டும் அந்த நிலையை ஏற்படுத்தி வருகின்றது. சிங்கள மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதேபோன்று தமிழ் மக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். நல்லிணக்கம் என்ற பெயரில் இந்த ஒற்றுமையை குலைக்க பார்க்கின்றனர். நல்லிணக்கம் என்ற பெயரில் இருக்கின்ற சமாதானத்தை சீர்குலைக்கப் பார்க்கின்றனர். எனவே தமிழ் மக்கள் இந்த தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

கேள்வி       சரி. யுத்தம் முடிந்தத பின்னர்  உங்கள் அரசாங்கத்தின்  வகிபாகம் சரியாக இருந்தா?

பதில்          நாங்கள் யுத்தம் முடிந்ததும் மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பினோம். மக்களின் மீள்குடியேற்றத்தை முன்னெடுத்தோம். பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தோம். அடுத்த கட்டத்தை நோக்கி நாங்கள் நகர்ந்தபோது  அதனை விட அதிகமான எதிர்பார்ப்புக்களை கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டனர். தற்போது எதிர்வரும் காலங்களில் செய்வதாக கூறுகின்றனர். மூன்று வருடங்களில் செய்ய முடியாததை எஞ்சியுள்ள இரண்டு வருடங்களில் செய்ய முடியுமா?

கேள்வி       யுத்தம் முடிந்த பின்னர் வடக்கில்   அபிவிருத்தியை செய்ததாக கூறுகின்றீர்கள்.   தற்போதைய நிலைமை குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்          உண்மையில் தற்போதைய நிலை குறித்து  நான் கவலையடைகின்றேன்.   நான் தெற்கை விட  வடக்கில்  அதிக வேலை செய்தேன். முகாம்களில் வாழ்ந்தோரை   மீள்குடியேற்றினோம்.  அவர்களை   அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றினோம்.  அப்போது  அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.   ஆனால் அந்த அனைத்து விடயங்களும்   இன்று  ஸ்தம்பிதமடைந்துள்ளன.   வடக்கு மக்களின்   வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பியதுடன் அவர்களின் பிள்ளைகளுக்கு  சிறந்த கல்வியை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தை  ஆரம்பித்தோம்.

வடக்கு பிள்ளைகளின் கல்வி   தொடர்பில் பாரிய   வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம்.    அதனால்  இம்முறை   உயர்தரப் பரீட்சையில்  அகில இலங்கை ரீதியில்  யாழ். மாணவன் முதலாம்  இடத்துக்கு வந்தார்.  அது நாம்  இட்ட அடித்தளத்தின் ஊடாகவே  முன்னெடுக்கப்பட்டது. அது தொடர்பில்  நான் பெருமை அடைவதுடன்  மகிழ்ச்சியடைகின்றோம்.  மஹிந்த ராஜபக்ஷ  கண்ட கனவு நனவாகியது.

ஆனால்  இந்த விடயத்தில்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமக்கு  ஒத்துழைப்பு வழங்கவில்லை. இந்த பிள்ளைகள்  இவ்வாறு முன்னேற்றமடைவது தொடர்பி்ல்      கூட்டமைப்பினர்   பொறாமை கொண்டிருந்தனர். மஹிந்த ராஜபக்ஷ வடக்குக்கு செய்த  வேலைகளை    கூட்டமைப்பினர் விரும்பவில்லை.  அவர்களினால் அதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

கேள்வி  எனினும் இன்னும் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளனவே?

பதில்    நாங்கள் எமது காலத்தில்  அதிகளவில் காணிகளை  விடுவிக்க நடவடிக்கை எடுத்தோம்.    இந்த காணிகள்  எவையும் மஹிந்தவின் ஆட்சியில் எடுக்கப்பட்டவையல்ல.    அவற்றை மஹிந்த   விரைவாக   விடுவித்தார்.     நாங்கள்   கண்ணிவெடிகளை அகற்றிவிட்டு   காணிகளை படிப்படியாக விடுவித்தோம். ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களில்    அனைத்து காணிகளையும் விடுவித்திருக்கலாம்.  நாங்கள்   அதற்கு எதிர்ப்பு என்று  கூற முற்பட்டனர். நாங்கள் எதிர்ப்பில்லை.  முழுமையான  ஒத்துழைப்பை வழங்குவோம்.     பொது மக்களின் சொந்தக் காணிகளை அவர்களுக்கு மீண்டும் வழங்கவேண்டும் என்பதே  எமது கோரிக்கையாகும்.    அதனை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

கேள்வி  காணாமல் போனோரின் உறவினர்கள்   இன்னும்    வீதிகளில் போராடுகின்றனரே?

பதில்   நாங்கள் பரணகம  குழுவை  நியமித்து   இது  தொடர்பில் விசாரித்தோம்.  அதனை இந்த  அரசாங்கம்  குழப்பியது. எமது நாட்டில் உள்ளவர்களினால் இதனை தேட முடியாவிடின்  வெளி நாட்டினர் வந்து தேட முடியுமா?

கேள்வி நல்லாட்சி  அரசாங்கம்    காணாமல் போனோர் அலுவலகத்தை நியமித்துள்ளதே?

பதில் மூன்று வருடங்களாக   அந்த அலுவலகத்தை  அமைத்துக்கொண்டிருக்கின்றனர்.   அலுவலகத்தை  அமைக்க மூன்று வருடங்கள்  தேவைப்பட்டால்     அதனை நடைமுறைப்படுத்த எத்தனை வருடங்கள் தேவை?   இந்த அரசாங்கம்   இந்த விடயத்தில் பொய்  செய்கின்றது.

தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பினர் இவற்றை  மறைத்துக்கொண்டிருக்கின்றனர்.  அன்று  மக்களுக்கு  எதிராக  தமிழ்க் கூட்டமைப்பினர்   அரசாங்கங்களிடம்   பெற்ற  வரப்பிரசாதங்களை  தமிழ் மக்கள் அறிந்துகொண்டால்   என்ன நடக்கும்?  அரசாங்கத்திடம்   வரப்பிரசாதங்களை பெற்றுக்கொண்டு  தமிழ்  மக்களுக்கு செய்த   சேதம் எமக்குத் தெரியும்.  அது எனக்கு   தெரியும்.  கூட்டமைப்பினர்  பெற்ற வரப்பிரசாதங்கள் குறித்து நான்  எதிர்காலத்தில் வெ ளிப்படுத்துவேன்.   அது  தெரிந்தால் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களுக்கு அந்த  மாகாணங்களுக்கு போக முடியாது.   தமது பிள்ளைகளுக்கு  வெ ளிநாடுகளில் வீடுகளை பெற்றுக்கொடுத்தமை  அவர்களுக்கு கல்வி சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுத்தமை எமக்கு  தெரியும்.  அவற்றை நான் நேரம் வரும்போது கூறுவேன்.  

மக்களை மீள்குடியேற்றும்போது   மக்களுக்கு ஒரு தண்ணீர் போத்தலை கூட கூட்டமைப்பினர் வழங்கவில்லை.  விநோதன்  எம்.பி. மட்டுமே  அன்று வந்திருந்தார்.   சம்பந்தன் இன்று எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.  தமிழ் மக்களுக்கு ஒரு மதகை கூட  பெற்றுக்கொடுக்கவில்லை.   தமிழ் மக்களுக்கு அவர்எதனை   பெற்றுக்கொடுத்தார்?   நாங்கள் மூன்று வருடங்களில் பாரிய வேலைத்திட்டங்களை செய்தோம். 

கேள்வி உங்கள் ஆட்சிக்காலத்தில் கூட்டமைப்பினர் என்ன   வரப்பிரசாதங்களை பெற்றனர்?

பதில் அதனை நான் தற்போது கூறமாட்டேன். வரப்பிரசாதங்களை பெற  எவ்வாறு செயற்பட்டனர் என்பதனையும்   இன்னும் நான் கூறவில்லை. ஆனால் கூட்டமைப்பின் தலைவர் தமிழ் மக்களுக்கு இன்னும்  எதனையும் பெற்றுக்கொடுக்காமல் இருந்தால் சில விடயங்களை  நான் வெ ளிப்படுத்தவேண்டியேற்படும். எதிர்க்கட்சித் தலைவர் நியமித்துக்கொண்ட ஜனாதிபதி ஒருவர் இன்று இருக்கின்றார். அவர் எவ்வளவோ  வேலைத்திட்டங்களை செய்திருக்கலாம்.   கூட்டமைப்பு ஆதரவளித்திருக்காவிடின்   இந்த அரசாங்கம் உருவாகியிருக்காது. ஆனால்  இதில்  தமிழ் மக்களுக்கு என்ன பெற்றுக்கொடுத்தனர்? கிழக்கு மக்களுக்கு எதனை பெற்றுக்கொடுத்தனர்? 

கேள்வி இந்த அரசாங்கத்தில் தீர்வு கிடைக்காது என்று கூறுகின்றீர்களா?

பதில்  தீர்வைப் பெற முடியும். ஆனால்  எதிர்க்கட்சித் தலைவர்  அதனை பெற மாட்டார்.  அன்று  அவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட்டிருந்தால்  ஒரு தீர்வுக்கு  சென்றிருக்கலாம். ஆனால் அன்று  அவர்  ஆதரவு வழங்கவில்லை.  மஹிந்த ராஜபக்ஷ  எத்தனை  தடவை  அழைத்தார்?  அவர்கள் வரவில்லை.   இன்று   மாகாண சபை உரிமை   இல்லாமல் போயுள்ளது. இன்று கிழக்கு  மாகாண சபை  தேர்தல் நடை்பெறவில்லை.    மாகாண  சபைகளுக்கு அதிகாரங்களை கேட்கின்றனர். ஆனால்   மாகாண சபை உரிமையை  மறுக்க ஆதரவளித்தனர். ஆளுநரின்  அதிகாரங்களை  குறைக்குமாறு  கூறிவிட்டு    தற்போது கிழக்கு மாகாண சபை  அதிகாரங்களை   ஆளுநருக்கு வழங்கியுள்ளனர்.  இதற்கு  எதிர்க்கட்சித்  தலைவர்    பதிலளிக்கவேண்டும். 

வடக்கு  மாகாண சபை  தொடர்பில் மக்களின்  மதிப்பீடு என்னவென்று பார்க்கவேண்டும்.   கூறிய  எதுவும் வழங்கப்படவில்லை.   நாங்கள்  மத்திய அரசாங்கத்தில் இருக்கும்போது     செய்த  வேலைத்திட்டங்கள் மட்டுமே உள்ளன.     விவசாய  மற்றும்  பொறியியல் பீடங்களை  உருவாக்க நடவடிக்கை எடுத்தோம்.  ஆனால் கடந்த மூன்று வருடங்களில் கூட்டமைப்பு எதனை  பெற்றுக்கொடுத்தது?    மக்களின் வாழ்வாதாரத்தை  குழப்பியுள்ளனர்.  வெங்காய பருவ காலத்தில்   வெங்காயத்தை இறக்குமதி செய்கின்றனர்.    பால் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பால் மா இறக்குமதி   வரி நீக்கப்பட்டது.

நான் வடக்கின் பொருளாதாரக் கட்டமைப்பை  தெரிந்து வேலை செய்தோம்.   கூட்டமைப்பு எமக்கு ஆதரவு வழங்கியிருந்தால் மேலும்   அதிகமாக செய்திருக்கலாம். வடக்கில்   உள்ளூராட்சி தேர்தலை நடத்தினோம்.   வடக்கு மாகாண சபையை உருவாக்கினோம். வடக்கு மாகாண சபை இருக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷவே    வடக்கு மாகாண சபையை உருவாக்கினார்.   மஹிந்த நீ்ட்டிய  கைகளை  பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் கூட்டமைப்பு அவற்றை வெட்டிவிட்டது.

கேள்வி  12000   புலி உறுப்பினர்களை விடுவித்த உங்கள் அரசாங்கம்   200  அரசியல் கைதிகளையும் விடுவித்திருக்கலாமே?

பதில் அதில் ஒரு சிக்கல் இருந்தது.  அதாவது     அரசாங்கத்திடம்  சரணடைந்த   உறுப்பினர்களையே  நாங்கள்  அரசியல் தீர்மானத்தை மேற்கொண்டு விடுவித்தோம். இவர்கள் கைது செய்யப்பட்டவர்கள். எனவே    ஒரு  செயற்பாடு  தேவைப்பட்டது.  

எப்படியிருப்பினும்  வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள தமிழ்   மக்களுக்கு நான் ஒரு கோரிக்கையை  வைக்கின்றேன். கடந்த மூன்று வருடங்களில் தற்போதைய  அரசாங்கம்   உங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை   நிறைவேற்றியிருந்தால் நீங்கள் அவர்களுடன் இருக்கலாம்.  ஆனால் அவ்வாறு  எதுவும் இல்லாவிடின்  எங்களுக்கு வாக்களியுங்கள்.    கடந்த மூன்று வருடங்களில்  தமிழ் மக்கள்   மகிழ்ச்சியாக   தங்கள்  நோக்கங்கள் நிறைவேறியதாக கருதினால்    அவர்களுடன் நிற்கலாம்.  இல்லாவிடின் எங்களுடன் இணையலாம்.    எங்களுக்கு வாக்களிக்கலாம். நாங்கள்       எங்கள் சேவையை மீண்டும் வழங்க தயாராக இருக்கின்றோம்.   ஆனால் நாடு தற்போது  பின்னுக்கு சென்றுள்ளது.   எனவே நிறுத்திய  இடத்திலிருந்து நாங்கள் ஆரம்பிக்க முடியாது. மாறாக   அதனையும் தாண்டி   ஆரம்ப இடத்திலிருந்து ஆரம்பிக்கவேண்டியுள்ளது.

- ரொபட் அன்டனி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right