பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், முழந்தாளிட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (30) ஹட்டன் நகரில் கொட்டும் மழையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் ஹட்டன் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமானது. இதில், இலங்கை ஆசிரியர் சங்கம், மலையக ஆசிரியர் முன்னணி, ஆசிரியர் விடுதலை முன்னணி, இலங்கை கல்வி சமூக சம்மேளனம், இலங்கை ஐக்கிய தமிழர் ஆசிரியர் சங்கம் என்பனவற்றின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பாடசாலை அதிபர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரும் ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, ஆசிரியர் சமூகத்தையும் அதிபர் சமூகத்தையும் கல்விச் சமூகத்தையும் பெண்கள் சமூகத்தையும் அவமானப்படுத்தியவர்கள் அனைவரையும் உடனடியாக பதவி நீக்கவேண்டும் என்றும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.