மரணத் தறுவாயில் கொலைகாரனின் பெயரை உச்சரித்துவிட்டு உயிரிழந்த பெண்ணின் காணொளி இணையதளங்களில் பரவி வருகிறது.

பாகிஸ்தானின் அபோதாபாத்தைச் சேர்ந்தவர் ஆஸ்மா ராணி. இவர் மருத்துவக் கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவி. 

தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ஆஸ்மா ராணியை இளைஞர் ஒருவர் தொந்தரவு செய்து வந்திருக்கிறார். அதற்கு மறுத்தால் ஆஸ்மா ராணியைக் கொலை செய்துவிடுவதாகவும் கடந்த சில நாட்களாக அவர் அச்சுறுத்தி வந்துள்ளார்.

எனினும் அவரது விருப்பத்துக்கு இணங்க ஆஸ்மா மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த அந்த இளைஞர், இரண்டு தினங்களுக்கு முன் ஆஸ்மாவின் வீட்டுக்கு அருகில் சென்று காத்திருந்தார்.

முச்சக்கரவண்டியொன்றில் வந்திறங்கிய ஆஸ்மாவின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபின் அந்த இளைஞர் தப்பிச் சென்றுள்ளார்.

கடும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஸ்மாவிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். உடல் நிலை மோசமடைந்து உயிரிழக்க ஓரிரு நொடிகளே இருந்த நிலையில், தன்னைப் பின் தொடர்ந்தவரின் பெயர் முஷ்தாக் அஃப்ரிடி என பொலிஸாரிடம் கூறிய பின் உயிரை விட்டார் ஆஸ்மா.  இதை பொலிஸார் காணொளியாகப் பதிவு செய்தனர்.

இந்தக் காணொளியின் அடிப்படையில் முஷ்தாக் அஃப்ரிடியையும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரரையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

சந்தேக நபர், இம்ரான் கானின் கட்சியின் முக்கிய பதவியில் உள்ள ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.