வீட்டு வேலையை செய்யாமல் எந்நேரமும் செல்போனை பயன்படுத்தி வந்த மனைவியை, கணவர்  கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள சேத்லா பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் மனைவி  செல்போனிற்கு அடிமையாகி எந்நேரமும் வாட்ஸ்-அப், பேஸ்புக் பயன்படுத்துவதில் ஆர்வமாக இருந்து வந்துள்ளார்.

இதனால் அவர் வீட்டு வேலைகளை கூட சரியாக கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. மனைவியின் நடவடிக்கையை பலமுறை  கண்டித்த போதிலும், அதனை அவரது மனைவி கண்டுகொள்ளவில்லை.

சம்பவத்தன்று மனைவி பெல்போன் பயன்படுத்துவதை பார்த்து கணவர் கடுமையாக கண்டித்துள்ளார்.  இதனால் கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு, ஒரு கட்டத்தில்  ஆத்திரமடைந்த கணவர் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

கல்லூரிக்கு சென்றிருந்த மகன் வீடு திரும்பியபோது தாயார் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தாரின் உதவியுடன் பொலிஸ்க்கு தகவல் வழங்கியுள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தலைமறைவாக இருந்த சந்தேக நபரை பொலிஸார்  கைது  செய்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.