(எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி செயலகத்துக்கு சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் 179 இலட்சம் ரூபா நிதி மோசடி தொடர்பில், முன்னாள் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை விசாரணை செய்ய பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவு ( எஸ்.ஐ.யூ.)  நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் டி.எஸ். குணரத்ன, முன்னாள் கணக்காளர் எல்.டி. குணரத்ன ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையிலேயே, அவர்களின் வாக்கு மூலத்துக்கு அமைவாக , குறித்த கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரை விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந் நிலையில் கடந்த வெள்ளியன்று ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் டி.எஸ். குணரத்ன, முன்னாள் கணக்காளர் எல்.டி. குணரத்ன ஆகியோர் கைது செய்யப்பட்டு பெப்ரவரி முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந் நிலையிலேயே இம்மோசடி இடம்பெற்ற காலப்பகுதியில் ஜனாதிபதி செயலக வாகன இறக்குமதியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் குறித்த கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் விசாரணைகளுக்குட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.