என்மீது சுமத்தப்படும் போலியான குற்றச்சாட்டுகளுக்கு  சட்ட நடவடிக்கை எடுக்கவும் பதில் வழங்கவும் நான் தயாராக இருக்கிறேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாளேந்திரனின்  வீடு தொடர்பாக முகநூல்கள் மற்றும்  இணையத்தளங்களிலும் வெளியானசெய்தி தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த சில நாட்களாக எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடைபெறுவதனால் தேர்தல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் சிலர் போலியான, அடையாளம் காணமுடியாத முகப்புத்தகங்களிலும், சில இணையத்தளங்களிலும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.

இதில் குறிப்பாக எனது வீடு, நிதிகள்  தொடர்பான விடயத்தை மிகைப்படுத்தி பிழையான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

நாம் கடந்த காலங்களில் யாரையும் கடத்தி அல்லது கப்பம் வாங்கி அல்லது கொன்று அல்லது எம் மக்களின் நிலங்களை விற்று சொத்துச் சேர்த்தவனல்ல.

அரசியலுக்கு வரும் முன் என்ன தொழில்களை செய்தோமோ அவற்றை வந்த பின்பும் செய்து வருகின்றோம். இது யாவரும் அறிந்த விடயம். சொந்த உழைப்பில் கல்வி நிலையங்களையும், கல்லூரிகளையும் முன்பே உருவாக்கியுள்ளோம். நூற்றுக்கணக்கான மாணவர்களை அன்று முதல் இந்த நிமிடம் வரை இலவசமாக கற்பிக்கின்றேன்.

இன்று சில அரசியல் வாதிகளுக்கு வெளிநாடுகளில் நிதி, சொத்துக்கள் உண்டு. இங்கு அவர்கள் பிச்சசைக்கார கோலத்தில் திரிகின்றார்கள். அவர்கள் தங்களை வெளியில்காட்டிக் கொள்வதில்லை அவர்கள் இவ்வாறானவர்களின் கண்களில் படுவதில்லை. நாம் 100 வீதம் உண்மையாக இருப்பதனால் வெளிப்படையாக உள்ளோம். இதுதான் தவறு என்று நான் நினைக்கின்றேன்.

நான் ஒரு சதம் கூட அநியாயமாக சம்பாதித்ததில்லை சம்பாதிக்க போவதும் இல்லை. சிலர் தாங்கள் விளங்கியதை புரிந்ததை எழுதுகின்றார்கள்.

போலியான முகப்புத்தகங்களிலும், முகவரி இல்லா சில இணையத்தளங்களிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக செயற்படும் நீங்கள் உண்மைக்கும், நீதிக்கும் உட்பட்டவர்கள் என்றால் என்னுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். அனைத்து விடயங்களையும் வெளிப்படையாக வெளிப்படுத்த நாம் தயார்.

அடையாளம் காணமுடியாத போலியான சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகளுக்கு நான் பதில் கூறவேண்டிய அவசியம் இல்லை. இருந்தும் உண்மையை ஏற்றுக்கொள்ளலாம் ஆனாலும் உண்மைக்கு புறம்பான செய்திகளை சகித்துக்கொள்ள முடியவில்லை.

தொடர்ந்தும் உண்மைக்கு புறம்பான செய்திகளை பிரசுரிப்பவர்கள், பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.