ரஷ்யாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கக் கோரி ஆப்பாட்டப் பேரணியை முன்னெடுத்த குற்றச்சாட்டின் பேரில், ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கக் கோரி, ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் நேற்று  பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் நவால்னியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்ட நவால்னி உட்பட சுமார் 180 பேரை கைதுசெய்து தடுத்துவைத்திருந்த பொலிஸார், பின்னர் விடுவித்துள்ளனர்.

இதேவேளை, எதிர்கட்சித் தலைவர் நவால்னியின் அலுவலகம் பொலிஸாரினால் நேற்று முற்றுகையிடப்பட்டதுடன், அங்கிருந்து பாரிய உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்குப் பாரிய சவாலாகக் காணப்படும் 41 வயதான நவால்னி, தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தபோது, நவால்னி மீது காணப்படும் ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாக, தேர்தலில் போட்டியிடும் தகுதியை அவர் இழந்துள்ளதாக அந்நாட்டுத் தேர்தல்கள் ஆணையகம் கூறி, வேட்புமனுவை நிராகரித்திருந்தது.

இது தொடர்பாக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நவால்னி செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், அவர் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.