மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண விரிவானதொரு செயற்திட்டத்தினை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

தலவாக்கலை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,

மலையகத்தில் வீடமைப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட சகல துறைகளையும் அபிவிருத்தி செய்து அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்காக அரசாங்கம் என்றவகையில் சகல உதவிகளும் வழங்கப்படும்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிசெய்யும் பொருட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் சந்திப்பில் இன, மத பேதமின்றி பெருந்திரளான மலையக மக்கள் கூடியிருந்ததுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகத்தான வரவேற்பு அளித்தனர்.

சகல மக்களினதும் பிரச்சினைகள் தொடர்பாக தமக்கு சிறந்த புரிந்துணர்வு காணப்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

இந்த பிரச்சினைகளைத் தெளிவாக ஆய்வுசெய்து அவற்றிற்கு நிலையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தலே தனது நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.

தேயிலைக் கைத்தொழிலின் மேம்பாட்டிற்கான விசேட செயற்திட்டமும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, தேயிலை, தென்னை உள்ளிட்ட சகல ஏற்றுமதிப் பயிர்களினதும் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மலையகத் தேயிலைத் தோட்டங்களில் நீண்டகாலமாக தேயிலை மீள்நடுகை செய்யப்படாமையினால் தேசிய பொருளாதாரத்திற்கும் அப்பிரதேச மக்களினது வாழ்க்கைத் தரத்திலும் ஏற்பட்டுள்ள தாக்கங்களை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேயிலை மீள்நடுகை செய்வதனைத் துரிதப்படுத்தல் தொடர்பாக தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் அரசாங்கத்தின் சகல நிறுவனங்களினதும் பங்குபற்றலோடு கலந்துரையாடப்படும் எனவும், மீள் ஏற்றுமதி காரணமாக தேயிலைக் கைத்தொழிலுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களை நீக்குவதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் மலையகத்தில் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கும் விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் நீருற்றுக்களின் பாதுகாப்பு மற்றும் பிரதேச பாதுகாப்பினை உறுதிசெய்யவும் விசேட திட்டம் உருவாக்கப்படும் எனத் தெரிவித்ததுடன் ஹட்டன், தலவாக்கலை, நுவரெலியா மற்றும் கந்தப்பொல ஆகிய நகரங்களை அபிவிருத்தி செய்ய விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் ஹட்டன், டிக்கோயா மருத்துவமனையின் குறைபாடுகளைத் தீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

பொதுஜன முன்னணியின் சார்பில் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பகமுவ பிரதேச சபைக்கும் நோர்வுட் பிரதேச சபைக்கும் போட்டியிடும் இரு அபேட்சகர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து, அவருடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அமைச்சர்கான சுசில் பிரேமஜயந்த, எஸ்.பி.திசாநாயக்க, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், செந்தில் தொண்டமான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன், மத்திய மாகாண அமைச்சர் எம்.ராமேஷ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் பழனி சக்திவேல், பிலிப்குமார மத்திய மாகாண சபையின் உப தலைவர் எஸ்.பி.ரத்நாயக்க, நுவரெலிய மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் ரொஷான் குணவர்தன உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதனிடையே நுவரெலிய மாவட்ட மருத்துவமனையின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாகக் கண்டறிய, குறித்த மருத்துவமனையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய கட்டிட தொகுதியைப் பார்வையிட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, மாவட்ட மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக அந்த நிர்மாணப்பணிகளைத் துரிதமாக நிறைவு செய்யுமாறும் ஆலோசனை வழங்கினார். 

சுமார் 600 நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய வசதிகளை உடைய இந்த மருத்துவமனை, சத்திரசிகிச்சை வசதிகளையும் மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்குமான தங்குமிட வசதிகளையும் கொண்டுள்ளது.

அதன்பின்னர் கொட்டகல இலங்கை தொழிலாளர் மன்றத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தோட்ட முகாமையாளர்களுடான சந்திப்பிலும் கலந்து கொண்டார். அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன் எதிர்காலத்தில் இதனுடன் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் அழைத்து குறித்த பிரச்சினைகள் தொடர்பாகக்  கலந்துரையாடப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.