ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் தனி அரசாங்கத்தை  அமைக்கவும் அதில் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்கவும் நாம் தயார். ஆனால் தனித்து அரசாங்கத்தை அமைக்க யாருடன் கூட்டணி அமைப்பது என்பதே கேள்விக்குறியாக  உள்ளது என்று   அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

மஹிந்தவை பிரதமராக்க  தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி தயாரா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்தும் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்க வேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அது குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், 

இந்த நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய வங்கியை புலிகள் தாக்கியது.  அத்துடன் , கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் யானையும் தாக்கியது. பொதுவாக  யானை தாக்கினால் அது சாதாரண தாக்குதலாக  அமையாது. அதேபோலவே மத்திய வங்கியில்மேற்கொண்ட ஊழல் இன்று நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக வீழ்த்தும் அளவிற்கு அமைந்துள்ளது. கள்ளர்களை பிடிக்க வந்த அரசாங்கத்தில் இன்று கள்ளர்களை பிடிப்பதே கடினமாக உள்ளது. முன்னைய கள்ளர்களும், இப்போதைய கள்ளர்களும் இணைந்து களவுகளை தடுக்க கடுமையாக முயற்சித்து வருகின்றனர். எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் கள்ளர்கள் அனைவரும் நன்றாக மோதிக்கொள்வார்கள். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இதில் தலையிடாது. 

ஐக்கிய தேசிய கட்சியினர்  கள்ளர்கள் கட்சி அல்ல, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் தூய்மையான கட்சியாகும். எனினும் கட்சிகள் இரண்டிலும் உள்ள கள்ளர்கள் மூலமாக இன்று நாடே சின்னாபின்னமாகியுள்ளது. ஊழலை ஒழிக்க ஜனாதிபதி தனித்து போராடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தனி அரசாங்கம் ஒன்றை நாம் உருவாக்க வேண்டும். அதற்காக நாம் மேலதிகமாக 17 உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள வேண்டும். 

அதபோல் மஹிந்த ராஜபக் ஷவை வைத்து இவர்கள் அரசியல் செய்து வருகின்றனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் மூலமாக மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்குவதாக  பொதுஜன முன்னணியினர் தெரிவித்து வருகின்றனர். இது அவர்களின் மிகப்பெரிய முட்டாள்த்தனமான கருத்தாகும். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவில் எவ்வாறு பிரதமர் நியமிக்கப்பட முடியும். இத்தனை கால அரசியல்வாதிகளுக்கு இது தெரியவில்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆனால் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்க நாம் தயார். எமக்கும் விருப்பமாகவே உள்ளது. 

ஆனால் தனித்து அரசாங்கம் அமைத்து அதில் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக நியமிக்க எமக்கு போதுமான உறுப்பினர்கள் இல்லை. இப்போது 95 பேர் மாத்திரமே உள்ளனர், மேலும் 17 உறுப்பினர்களை எம்முடன் இணைத்துக்கொள்ள வேண்டும். யாரை இணைப்பது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் எமக்கு ஆதரவாக செயற்படுவார்களா? அல்லது மக்கள் விடுதலை முன்னணியின் 6 உறுப்பினர்கள் எம்முடன் இணைவார்களா ? அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின்  உறுப்பினர்களில் 17 பேரை பெற்றுக்கொள்ள முடியுமா? தமிழ் தேசியக் கூட்டமைப்போ, ஜே.வி.பியோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்க தயாரா? அவ்வாறு இடம்பெறும் வாய்ப்புகள் இல்லை. யதார்த்தமாக அவ்வாறு இடம்பெறாது. பொது எதிரணியினர் இன்று எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் என விரும்பம் தெரிவித்து வருகின்றனர். இப்போதுதான் அவர்களுக்கு நாம் தேவைப்படுகின்றோம். எனினும் யாரும் குழப்பமடைய அவசியம் இல்லை. நாம் தனித்து ஆட்சியினை அமைப்போம் அதுவும் அவசியமான நேரத்தில் இடம்பெறும்  என்றார்.