பஸ் கட்டண உயர்வு திரும்பப்பெறாப்படாவிட்டால் நாளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக திமுக அறிவித்திருக்கிறது.

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதில் திமுகவுடன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்குபற்றின.

சென்னையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெ அன்பழகன் தலைமையில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் பங்குபற்றி தமிழக அரசிற்கு எதிராக கண்டன முழக்கமிட்டார்.

‘தமிழக அரசே பஸ் கட்டண உயர்வு நியாயம்தானா?, ‘பஸ் கட்டண உயர்வை ஒரு போதும் ஏற்க மாட்டோம்’, ‘தமிழக அரசே பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறு’ ‘ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் எடப்பாடி அரசே பதவி விலகு’, ‘போராடுவோம் போராடுவோம் பஸ் கட்டணத்தை குறைக்கும் வரை போராடுவோம்’ போன்ற கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதைத் தொடர்ந்து திமுகவின் சார்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. அதில்

‘ ஆகவே 27 ஆம் திகதி (நேற்று) நடைபெறவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பிறகும் பஸ் கட்டண உயர்வை அ.தி.மு.க. அரசு மறுபரிசீலனைக்கு உட்படுத்தாமல், அனைத்துத் தரப்பு மக்களும் படும் துயரத்தைக் கண்டு பரிவுடன் கூடிய அணுகுமுறையைப் பின்பற்ற மறுக்குமேயானால் நாளை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதி, ஒன்றியங்கள், நகரங்கள் என மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டு சிறை நிரப்பும் போராட்டத்தை தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் நடத்திட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தகவல் : சென்னை அலுவலகம்