பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை, மாகாண முதலமைச்சர் மண்டியிட வைத்தமை, மன்னிப்பு கோரச் செய்தமை, அச்சம்பவம் தொடர்பில் பொய்யான வாக்கு மூலத்தை வழங்க அச்சுறுத்தியமை உள்ளிட்ட விடயங்கள் தேசிய மட்டத்தில் அவதானத்தை பெற்றுள்ளன. இவ்வாறான ஒரு சூழலில் அந்த விடயங்கள் குறித்து பொலிஸ் விசாரணைகளும், ஊவா ஆளுநரின் செயலாளரின் கீழும் பிரத்தியேகமான இரு விசாரணைகள் இடம்பெறும் நிலையில் பாராளுமன்றத்திலும் 9 பேர் கொண்ட குழுவொன்றின் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. இந்த விசாரணைகளின் போக்கு, அவ்விசாரணைகள் ஊடாக பாதிக்கப்பட்ட அதிபருக்கு நியாயம் கிடைக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதா என தற்போது கேள்வி எழுப்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் இந்த விவகாரம் குறித்த இரு முறைப்பாடுகள் மீது இடம்பெற்ற விசாரணைகளின் போது எழுப்பப்பட்ட சில கேள்விகளின் பாலும் அதற்கு பிரதிவாதிகளாக ஆஜராகியிருந்தவர்கள் வழங்கிய பதில், வாயடைத்துப் போன நிலைமைகள் மீது அவதானம் செலுத்தும் போதே, ஏற்கனவே கூறிய பொலிஸ் விசாரணைகள் உள்ளிட்டவை நியாயமாக நடக்கிறதா அல்லது அதன் ஊடாக நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எழுகின்றது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையானது, எச்.ஆர்.சி./236/18 எனும் முறைப்பாட்டு இலக்கத்துக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டது. அதன் முறைப்பாட்டாளர்கள் ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின், கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன்.
ஊவா முதலமைச்சரும் மேலே பெயரிடப்பட்ட ஊவா கல்விச் செயலர் உள்ளிட்டோரும் செய்த செயல் காரணமாக அரசியலமைப்பின் 12(1) ஆவது அத்தியாயம் மற்றும் 13 ஆம் அத்தியாயம் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள மொழி மற்றும் கருத்து வெளிப்பாட்டு உரிமை, 10 ஆவது அத்தியாயம் ஊடாக உறுதி செய்யப்படும் மன அமைதி ஆகியன கடுமையாக மீறப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டாளர்கள் ஊடாக, சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதனை கருத்தில் கொண்டு விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்று முன்தினம் ஆரம்பித்தபோது, அந்த விசாரணைகள் சுமார் 10 மணி நேரம் வரை நீடித்தன.
இதன்போதே பொலிஸ் விசாரணைகளின் போது முதலமைச்சருக்கு பிணை வழங்க பொலிஸார் எதிர்ப்பு தெரிவிக்காமை, பீ அறிக்கையினைப் பெறத்தக்கதாக தயார் செய்திருந்தமை, சாட்சிக்காக முன்வைக்க முடியுமான முதலமைச்சரின் இல்லத்தில் இருக்கும் சி.சி.ரி.வி. காணொளிகள் முன்வைக்கப்படாமை அல்லது அவை அழைக்கப்பட்டுள்ளமை, தமிழ் ஆசிரியையிடம் சிங்கள மொழியில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை போன்ற விடயங்கள் மீது அவதானம் செலுத்தும் போது உண்மையிலேயே பாதிக்கப்பட்ட அதிபருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க செயற்படுத்தப்படும் விசாரணைகளும் அதன் போக்குகளும் சந்தேகிக்கும்படியாகவே உள்ளன. ஒரே ஒரு ஆறுதல் மனித உரிமைகள் ஆணைக் குழுவூடாக அந்த தடைகள் தொடர்பில் வெளிப்படுத்த முடியுமாக இருப்பது மட்டுமே.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அதிபரான பவானி பதுளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை மையப்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருந்தது. அதன்படி மத்திய மற்றும் ஊவா சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்கவின் மேற்பார்வையில் பதுளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.ஆர்.ஜி.எம்.பி. எல்லேபொல, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஏ.பி.டி. வீரசேகர ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதன் பலனாக கடந்த 22 ஆம் திகதி பதுளை பொலிஸ் நிலையத்தில் ஊவா முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க சரணடைந்த நிலையில் அவருக்கு நீதிமன்றில் பிணையும் கிடைத்தது. அவருக்கு எதிராக அரச ஊழியரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, அச்சுறுத்தல் விடுத்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.
அப்படியானால் பாரதூரமான இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யும் பதுளை பொலிஸார், இந்த சம்பவத்தை மையப்படுத்தி பொதுமக்களிடையே எந்த கொந்தளிப்பும் இல்லை எனவும், முதலமைச்சரின் இல்லத்தில் உள்ள சி.சி.ரி.வி. காட்சிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் சாட்சி அழிப்பு குறித்து ஒருவார்த்தையேனும் சொல்லாது, முதலமைச்சர் பிணை பெற்றுச்செல்வதற்கு ஏதுவாக விசாரணைகள் நிறைவடைந்து விட்டதாகவும் நீதிமன்றுக்கு பொலிஸார் அறிவித்தமையானது, முதலமைச்சருக்கு பிணை பெற்றுக்கொடுக்கும் சதியின் செயற்பாடுகள் என்றே கருதவேண்டும். அவ்வாறு சதி இடம்பெற்றிருப்பின் அது பாதிக்கப்பட்ட அதிபருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை தடை செய்யும் நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.
இந் நிலையிலேயே அதிபரை முழந்தாளிடச் செய்த விவகாரம் தொடர்பிலான சம்பவம் பொலிஸ் மற்றும் அரசியல் பலத்தை வைத்து மூடி மறைக்கப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாக நாம் கருதுகின்றோம். குறிப்பாக அதிபருக்கு நடந்த அநீதிக்கு பொறுப்புக் கூற வேண்டிய முதல் சந்தேக நபர் முதலமைச்சர் எனில் இரண்டாமவர் ஊவா மாகாண கல்விச் செயலர் ஆவார். ஊவா கல்விச் செயலர் சந்தியா அம்பன்வெல முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மனைவியாவார். இந் நிலையில் முதலமைச்சரையும் கல்விச் செயலரையும் காப்பாற்ற அரசியல், பொலிஸ் அதிகார வர்க்கம் துடிப்பதாக சந்தேகிக்க ஏதுவான காரணிகள் உள்ளன. அதிபரை முழந்தாளிட வைத்த சம்பவத்தின் பின்னர் அப்படியொன்றும் நடக்கவே இல்லை என ஊடகங்களிடம் கருத்துக் கூற அச்சுறுத்தியதாக கூறப்படும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மனைவியான மாகாண கல்வி அமைச்சின் செயலர் சந்தியா அம்பன்வல உள்ளிட்டோருக்கு எதிராகவும் குற்றவியல் விசாரணை அவசியம் எனவும் அவர்களும் முதலமைச்சருடன் சேர்த்து கைது செய்யப்பட வேண்டியவரே. இதில் முதலமைச்சரின் கைக்கூலிகளாக செயற்பட்ட ஊடகவியலாளர்கள் என கூறிக்கொள்ளும் மூவர் ( மாகாண சபை ஊழியர்கள் ) தொடர்பிலும் நடவடிக்கைகள் அவசியமாகும். விட இவ்விவகாரம் தொடர்பில் பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில், விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அந்த விசாரணைகளில்கூட அரச உத்தியோகத்தர்கள் அழைக்கப்பட்ட போதும் முதலமைச்சர் விசாரணைக்காக அழைக்கப்படவில்லை. எனவேதான் அந்த விசாரணைகள் பாதிக்கப்பட்ட அதிபருக்கு எந்த அளவு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் என்பதில் கேள்விகளை எழுப்பச் செய்கின்றது.
எவ்வாறாயினும் அதிபரை முழந்தாளிடச் செய்த நடவடிக்கையினை முற்றாக மறுத்துவரும் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, தனது பெயருக்கு களங்கத்தினை ஏற்படுத்தியவர்களுக்கெதிராக 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்போவதாகவும், அது குறித்து சட்டத்தரணிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்து வருகின்றார்.
உண்மையில் இந்த சம்பவமானது கடந்த ஜனவரி மூன்றாம் திகதி முதலாம் தரத்துக்கான அனுமதி தொடர்பில் முதலமைச்சரின் கோரிக்கையை அதிபர் நிராகரித்த சம்பவத்தை மையப்படுத்தி, அதிபரை முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு வரவழைத்து நிந்தித்தமை, அதிபரை மண்டியிட்டு மன்னிப்பு கோர அழுத்தம் பிரயோகித்தமை தொடர்பில் ஊடகங்கள் ஊடாக வெளிக்கொணரப்பட்டதையடுத்து இது தொடர்பில் சர்ச்சை வெடித்தது.
எனினும் இந்த சர்ச்சைகளிடையே அதிபர் ஆர். பவானியின் வாக்குமூலம் ஒன்றும் ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டது. அதில் முழந்தாளிடச் செய்த சம்பவம் ஒன்று நடக்கவே இல்லை எனவும், முதலமைச்சரும் ஏனைய அதிகாரிகளும் பாடசாலையின் ஒவ்வொரு விடயத்திலும் அக்கறையுடன் செயற்படுவதாகவும், இது அரசியல் பருவகாலம் என்பதால் இவ்வாறு ஒரு கதை சொல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் கடந்த வாரம் அந்த வாக்கு மூலமானது அச்சுறுத்திப் பெறப்பட்டது என்பதை அதிபர் ஆர். பவானி வெளிப்படுத்தினார்.
' சுற்றறிக்கையின் பிரகாரமே, 2018ஆம் ஆண்டு முதலாம் தரத்துக்கு மாணவிகளை சேர்த்துக்கொள்ளும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. எங்களுடைய பாடசாலையை பொறுத்தவரையில் முஸ்லிம்களுக்கு 8 சதவீதமே ஒதுக்கப்படும். அதனடிப்படையிலேயே மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
எனினும், இன்னுமிரு மாணவிகளை சேர்த்துக்கொள்ள வேண்டுமென, முதலமைச்சர் சாமர சம்பத் கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார். அவ்வாறு கடிதங்களுடன் வந்திருந்த இருவரையும் அழைத்து, சுற்றறிக்கையை தெளிவுபடுத்தினேன்.
இயலாத பட்சத்தில் மாகாண பணிப்பாளர் அல்லது மாகாண செயலாளரிடம் கடிதங்களை பெற்று வருமாறு அவ்விருவரையும் அனுப்பி வைத்தேன். இதேபோன்றதொரு பிரச்சினை 2017 ஆம் ஆண்டின் போதும் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும்போது இடம்பெற்றது.
இந்நிலையில், ஜனவரி 3 ஆம் திகதியன்று தன்னுடைய காரியாலயத்துக்கு வருமாறு மாகாண செயலாளர் என்னை அழைத்திருந்தார். நானும் சென்றிருந்தேன். சிறிதுநேரம் கழித்து முதலமைச்சரின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு, தங்களுடைய பிள்ளைகளை முதலாம் தரத்துக்கு சேர்த்துக்கொள்ளுமாறு முதலமைச்சரின் கடிதங்களுடன் பாடசாலைக்கு வந்திருந்த பெற்றோர் இருவரும் இருந்தனர். மாகாண கல்விப் பணிப்பாளரும் இருந்தார்.
கடுமையான கோபம் கொண்டிருந்த முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க,
“நான் 8ஆவது படிக்காதவன் என்று தெரிவித்தீரா, உனக்கு இங்கு வேலையில்லை. ஏதாவது தூர பிரதேசமொன்றுக்கு இடமாற்றவும்” என, மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண செயலாளருக்கு கடுமையான கட்டளையிட்டார்.
அத்துடன், அவ்விரு பெற்றோர்கள் முன்னிலையிலும் முழங்காலிட்டு, மன்னிப்புக் கேட்குமாறு கேட்டார்.
“என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்தேன். என்ன செய்வதென்று தெரியாத நான், இறுதியில் முழங்காலிட்டேன். மன்னிப்பு கேட்டேன். என் வாழ்க்கையில் எப்போதும் பொய் சொல்லியது இல்லை. மாணவிகளை சேர்க்கும் விவகாரத்தில் இன, மத, மொழி உள்ளிட்ட வேறுபாடுகளை பார்க்கமாட்டேன். சுற்றறிக்கையின் பிரகாரமே செயற்படுவேன். கடந்த காலங்களில் செயற்பட்டும் உள்ளேன். ஆளுநர் எவ்விதமான அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை” என்றேன்.
எனினும், என்னுடைய விளக்கங்களுக்கு செவிசாய்ப்பதாக முதலமைச்சர் அன்றிருக்கவில்லை. தொழில் பயம், அச்சம் உள்ளிட்டவை காரணமாகவே, முழங்காலிட்டு மன்னிப்புக்கேட்டேன். அதனைவிட என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. எனினும், அவ்விடத்தில் மாகாண கல்விப் பணிப்பாளரும், மாகாண செயலாளரும் இருந்தனர். அங்கு நடந்தவை என்னவென்று அவர்களுக்குத் தெரியும்” என்றார்.
முதலமைச்சர் காரியாலயத்தில் நான் முகம்கொடுத்த சம்பவம் தொடர்பில், பாடசாலையின் லொக் புத்தகத்தில் அப்படியே பதிவிட்டுள்ளேன்.
“நான், அச்சுறுத்தப்பட்டதனால், அங்கு நடந்த சம்பவத்தை முற்றாக மாற்றியே ஊடகங்களுக்கு அன்று தெரிவித்தேன். அன்று நடந்த சம்பவம் எனது மனநிலையை வெகுவாகப் பாதித்துவிட்டது. எனக்கும், எனது பாடசாலைக்கும் களங்கம் ஏற்பட்டதை எண்ணி மனதுக்குள்ளேயே குமுறிக்கொண்டிருக்கின்றேன்.
“எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், மாகாண முதலமைச்சர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல, மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும்” என குறித்த சம்பவம் தொடர்பில் அதிபர் ஆர். பவானி பின்னர் நடந்தவைகளை ஒப்புவித்தார்.
இவற்றை அவர் பொலிஸ் வாக்கு மூலத்திலும், நேற்று முன்தினம் நடைபெற்ற மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளிலும்கூட குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைகள் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைப் பணிப்பாளர் நிஹால் சந்ரசிறியின் நேரடி கட்டுப்பாட்டின் முன்னிலையில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது இந்த விசாரணைகளுக்கு ஊவா கல்விச் செயலாளர் சந்தியா அமபன்வல ( விசாரணைகள் நிமித்தம் நேற்று முதல் அப்பதவியில் இருந்து அவரை இடை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊவா மாகாண ஆளுநரின் செயலர் தெரிவித்திருந்தார்), வலயக் கல்விப் பணிப்பாளர் ரத்நாயக்க, மாகாண சபை ஊழியர்களான ஊடகவியலாளர்கள் எனக் கூறப்படும் இருவர் உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர்.
பதுளை பிரிவின் கல்விப் பணிப்பாளர் சரத் ரணசிங்க மனித உரிமைகள் தொடர்பிலான விசாரணைக்கு ஆஜராகாது, தான் தேர்தல்கள் கடமையில் இருப்பதாக ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார். அத்துடன் பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் குறித்த விசாரணைகளுக்கு சமுகமளித்திருக்கவில்லை. மாற்றமாக அவர் சார்பில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ஆஜராகியிருந்தார்.
இந்த விசாரணைகளின் போது முதலமைச்சருக்கு பிணை பெற்றுக்கொடுக்கும் வகையில் பீ அறிக்கையை தயாரித்த பொலிஸார் அதனை திருத்தி உண்மையான பீ அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும், முதலமைச்சரின் வீட்டில் இருந்த சி.சி.ரி.வி. காட்சிகளை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கல்விச் செயலர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் இடை நிறுத்தப்பட உத்தரவிட வேண்டும் எனவும் முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஆணைக்குழுவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உன்மையில் நீதியான விசாரணைகள் இடம்பெறவேண்டுமாக இருந்தால் இந்த கோரிக்கைகள் அமுல் செய்யப்பட்டால் மட்டுமே அது சாத்தியப்படும் என்பது மட்டும் திண்ணம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM