அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் ருவன்புர பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போனஸ் ஆசனத்தில் போட்டியிடும் வேட்பாளர் முரளி ரகுநாதன் பயணித்த வாகனம் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை  8 மணியளவில் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி தேர்தலுக்காக அட்டன் சித்திரவத்தை தோட்ட பகுதியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போதே இந்த கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் அவர் பயணித்த காரின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதுடன், வேட்பாளரும் சிறிய காயத்துக்குள்ளாகியுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.