அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய நிதி மோசடிகள் இன்று வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டு காலப் பகுதியில் இலங்கை பெற்றுக்கொண்ட வெளிநாட்டு கடன் தொகை 10 டிரில்லியன்கள் ஆகும். நிதி அமைச்சின் புள்ளி விபரங்களின்படி அத்தொகையில் ஒரு டிரில்லியன் ரூபாவே செலவிடப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஏனைய நிதிகளுக்கு என்ன நடந்தது என்பதற்கான எந்தவித ஆவணமும் கிடையாது என்றும் இது பற்றி நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இன்று பிற்பகல் கம்பஹா நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற மத்திய வங்கி நிதி மோசடிகளின் மூலம் இந்த நாட்டின் அப்பாவி மக்களின் பணம் திருடப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த தேசிய குற்றத்துடன் தொடர்புடைய அனைவரும் பொறுப்புக்கூற வேண்டுமென்றும் தெரிவத்தார்.

அன்று மக்களின் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கு பாரிய மாளிகைகளை அமைத்தது பற்றி நினைவுகூர்ந்த ஜனாதிபதி, 350 கோடி ரூபா செலவில் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை இன்று வெறுமனே மூடப்பட்டிருப்பதாகவும் அதன் நன்மைகளை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அந்த மாளிகையை உயர்தரம் வாய்ந்த சுற்றுலா ஹோட்டலாக மாற்றுவதற்கு தற்போது சர்வதேச ரீதியாக விலைமனு கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்று ஊழல் மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்கின்றபோது மேல்தட்டு திருட்டுக் கூட்டணி ஒன்று உருவாகியிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தான் அவர்களுடன் போராட வேண்டியிருப்பதாகவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீதும் மக்கள் மீதும் நம்பிக்கை வைத்து அப்போராட்டத்தை முன்கொண்டு செல்வதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காக நாட்டு மக்கள் பயன்படுத்தும் வாக்கு, நாட்டை பாதுகாப்பதற்காக பயன்படுத்தும் வாக்காகும் என்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பலப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நாடளாவிய ரீதியில் நடைபெறும் மக்கள் சந்திப்பு தொடரின் கம்பஹா பிரதேச மக்கள் சந்திப்பு பெருந்தொகையான மக்கள் பங்குபற்றுதலுடன் இன்று பிற்பகல் கம்பஹா பஸ்தரிப்பிடத்தில் இடம்பெற்றது.

சமயத் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பண்டு பண்டாரநாயக்க, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.