பிபா உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிக் கிண்­ணத்தை உலகம் பூரா­கவும் கொண்டு செல்லும் பய­ணத் திட்டத்தின் முத­லா­வது நாடாக இலங்கை திகழ்­கின்­றது.

அதன்படி இன்று காலை 8.30 மணியிலிருந்து பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணிவரை இக் கிண்ணம் வைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைக்கிறார். அதேபோல் இலங்கைக் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 2030 ஆம் ஆண்டுக்கான விசேட வேலைத்திட்டமும் இந்நிகழ்வின் போது வெளியிடப்படவுள்ளது.

21ஆவது பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் இந்த வருடம்  ஜூன் மாதம் 14ஆம் திகதி முதல் ஜூலை மாதம்-- 15ஆம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வெற்றிக் கிண்ணத்தை உலகம் பூராகவும் கொண்டு செல்லும் பயணத்தின் நான்காவது முறையாக இடம்பெறும் இந்த வருட பயணம் இலங்கையில் இருந்து ஆரம்பிக்கின்றது.  மொத்தம் 54 நாடு­க­ளுக்கு பய­ண­மா­க­வுள்ள பிபா கிண்­ண­மா­னது முதல் நாடாக இலங்­கைக்­குத்தான் எடுத்து­ வ­ரப்­ப­டு­கி­றது. உலகக் கிண்ணத்தை ஏந்திய பிரத்தியேக விமானம் நேற்று மாலை இலங்கை வருவதாக இருந்தது. அதன்பிறகு இரண்டு மணிநேரம் விமானம் காலதாமதமாகும் என்றும் அதனால் குறித்த கிண்ணத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு இரவு 10.30 மணிக்கு நடைபெறும் என்றும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.