(க.கிஷாந்தன்)

நுவரெலியா மாவட்டத்தில் இயங்கும் சில வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக மாவட்ட வைத்தியசாலைகள் மற்றும் பிரதேச வைத்தியசாலைகளிலேயே மருந்து தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இவ்வாறான வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காகச் செல்லும் நோயாளிகளை வைத்தியர்கள் சிகிச்சைக்குட்படுத்திய போதும் போதிய மருந்துகள் இல்லாமையினால் மருந்தகங்களில் வாங்குமாறு சிட்டை எழுதிக் கொடுக்கின்றார்கள் என இங்குள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

பொருளாதார மட்டத்தில் பின்தங்கியுள்ள நிலையில் உள்ள இப்பகுதி மக்கள் குறிப்பிட்ட மருந்துகளை பெற்றுக்கொள்ளமுடியாத நிலையில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அத்தோடு சில மருந்தகங்களில் நோயாளர்களுக்குத் தேவையான மருந்துகள் இல்லாமையால் நகரப் புறங்களிலுள்ள மருந்தகங்களில் மருந்து வாங்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

இம் மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக அதிகமான பணம் செலவிட்டு ஹட்டன், தலவாக்கலை, நுவரெலியா போன்ற பிரதான நகரங்களுக்கு சென்று வாங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

எனவே இந்த பிரதேச மக்களின் நலன்கருதி சுகாதார திணைக்களம் குறிப்பிட்ட வைத்தியசாலைகளுக்கு மருந்து வகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

எனினும் இது தொடர்பாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர். சாந்தி சமரசிங்கவிடம் நாம் வினாவியபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.

வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மற்றும் சுகாதார குறைபாடுகளை கணணி மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளும் நவீன முறையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே இவ்வாறான குறைபாடுகளை இலகுவில் தவரித்துக்கொள்ளும் வாய்ப்புகள் இம்மக்களுக்கு கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.