தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா சார்பான குழுவினர் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்கொரியாவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

தென்கொரியாவின் தலைநகர் சியோலிலுள்ள மத்திய ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

தென்கொரிய பழமைவாத விமர்சகர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் உருவப்படத்தை தீயிட்டு எரித்துள்ளனர்.

தென்கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்போட்டியில் பங்கேற்க வடகொரியா விரும்பிய நிலையில் வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்குமிடையில் கலந்துரையாடல் நடைபெற்றுவருவதுடன் ஒலிம்பிக்போட்டியில் பங்கேற்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது.

இந்நிலையில் வடகொரியா சார்பாக 22 விளையாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளதுடன், ஒத்திகை பார்ப்பதற்காக வடகொரியா சார்பான கலைக்குழுவொன்று தென்கொரியாவுக்கு நேற்று வருகை தந்துள்ளது.

இச்சூழ்நிலையிலேயே குளிர்கால ஒலிம்பிக்போட்டியில் வடகொரியா சார்பான குழுவினர் பங்கேற்க எதிர்ப்புத் தெரிவித்து தென்கொரியாவில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.