சிரியாவிலுள்ள குர்திஷ் இராணுவக் குழுவை வெளியேற்றுவதற்கான முக்கிய தாக்குதலின் ஒருபகுதியாக வடக்கு சிரியாவினுள் துருக்கியின் தரைப்படையினர்  நுழைந்து  தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வை.ஜி.பி. என்று அறியப்படும் குர்திஷ் குழு துருக்கியின் தென் எல்லையிலுள்ள அஃப்ரின் பிராந்தியத்தில் இயங்கிவருகின்றது. இப்பிராந்தியத்திலிருந்து குர்திஷ் இராணுவக் குழுவை வெளியேற்றும் நோக்கில் துருக்கி  இராணுவம் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

மேற்படி பிராந்தியத்தின் 45 இடங்களில் தரைவழி மற்றும் விமானத் தாக்குதல்களை நேற்று  நடத்தியதாகத் துருக்கி இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

குர்திஷ் இராணுவக் குழுவை பயங்கரவாதியென்று கூறிவரும் துருக்கி தடைசெய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன் குர்திஷ் இராணுவக் குழுவினருக்குத் தொடர்புள்ளதாகவும் நம்புகிறது.

இதேவேளை தனது பகுதியிலிருந்து துருக்கியப் படையினரை விரட்டியுள்ளதாகக் கூறியுள்ள குர்திஷ் குழுவினர் இதற்குப் பதிலாக துருக்கி எல்லைப் பகுதியில் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக மோதலில் ஈடுபடும் அமெரிக்க ஆதரவுடைய கூட்டணியில் குர்திஷ் இராணுவக் குழு முக்கிய பகுதியாக உள்ளது.

குர்திஷ் குழுவை மிக விரைவாக ஒழிக்க துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன் உறுதியளித்துள்ளார். ஆனால்இ பொதுமக்கள் உயிரிழப்பதைத் தடுக்கத் துருக்கி தனது படையினரைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.