கதிர்காமத்தில், பொலிஸாரின் சமிக்ஞையையும் மீறி மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதாகக் கூறி பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்தார். 

இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலையம் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். அதைத் தடுப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளைப் பிரயோகித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு தோன்றியது.

சம்பவத்தை நேரில் கண்ட நபர் ஒருவர் விவரித்ததாவது:

குறித்த நபர் நேற்று இரவு சுமார் பத்து மணியளவில் கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். அவர் பொலிஸாருக்கு மிக நெருக்கத்தில் வரும்போது மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர்.

மிதமான வேகத்தில் வந்த அந்த நபர், உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்த முடியாததால், சில அடி தூரம் சென்று நிறுத்தியிருக்கிறார்.

அதற்குள், ஊர்காவல் படை வீரருடன் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர், குறித்த நபர் தப்பிச் செல்வதாக நினைத்து அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளார்.

இதில் நிலைகுலைந்து விழுந்த நபரை தூக்க முயன்ற இளைஞரையும் பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியுள்ளார்.

பின்னர் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, சுடப்பட்ட நபர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைகள் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்துக் கேள்விப்பட்ட அப்பகுதிவாசிகள் மற்றும் கொல்லப்பட்ட 44 வயது நபரின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தின் முன் கூடி கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதைத் தடுப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பிரயோகித்தனர்.

பின்னர், இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமை சுமுகமாக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், சைக்கிளை நிறுத்திய பின்னரே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.