தாய் தன் மகனை துப்பட்டாவால் கழுத்து நெறித்துக் கொலை செய்து, உடலை எரியூட்டிய பின், குப்பையில் வீசிய சம்பவம் கேரளாவின் கொல்லம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஜெயா (42)வின் மகன் ஜித்து (14). இவர் தனது தந்தை வழிப் பாட்டியின் வீட்டில் தங்கியிருந்தார். அண்மையில் வீடு திரும்பிய ஜித்துவுக்கும் ஜெயாவுக்கும் வாக்குவாதம் மூண்டுள்ளது.

இதில் ஏற்பட்ட ஆத்திரம் கண்ணை மறைக்கவே, ஜெயா தனது துப்பட்டாவால் ஜித்துவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார்.

பின்னும் கோபம் குறையாத அவர், ஜித்துவின் உடலை வீட்டின் பின்புறம் எடுத்துச் சென்று எரித்திருக்கிறார். எரியுண்ட சடலத்தின் பாகங்களை, வீட்டுக்கு அருகாமையில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசினார்.

வீடு திரும்பிய கணவரிடம், கடைக்குச் சென்ற மகனைக் காணவில்லை என்று கூறியுள்ளார். மறு தினம் அது குறித்து பொலிஸில் முறைப்பாடளித்தார்.

எனினும் ஜெயாவின் கைகளில் இருந்த எரிகாயங்களை அவதானித்த பொலிஸார் அது குறித்து வினவியுள்ளனர். இதில் ஜெயா தடுமாறியதைக் கண்ட பொலிஸார், அவரைத் தனியே அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அப்போது ஜெயா நடந்த உண்மையைக் கூறியுள்ளார். இதையடுத்து ஜெயாவை பொலிஸார் கைது செய்தனர்.

இந்த விடயம் குறித்துக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள், ஜெயா மீது கல் வீசித் தாக்குதல் நடத்தினர்.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற ஜெயாவின் கணவர், ஏற்கனவே ஜெயாவுக்கு மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.