பிணைமுறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில், ‘பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ்’ நிறுவனம் பெற்ற இலாபம் குறைவாகக் கணக்கிடப்பட்டுள்ளதாக ‘ஊழலுக்கு எதிரான குரல்’ (Voice Against Corruption - VAC ) என்ற அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்துப் பேசிய அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க கூறியதாவது:

“பிணைமுறி மோசடி 2015 - 2016ஆம் ஆண்டு காலப் பகுதியில் இடம்பெற்றதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அக்காலப் பகுதிக்குள் பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம் 11,500 மில்லியின் ரூபாவை சட்ட விரோதமான முறையில் இலாபமாகச் சம்பாதித்துள்ளதாக, ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எனினும் 2016 மார்ச் 31 வரையான காலப் பகுதிக்கான கணக்கு விபரங்களை மட்டுமே ஆணைக்குழு விசாரணை செய்துள்ளது. இருந்தபோதிலும், மத்திய வங்கி தலைவராக அர்ஜுன மகேந்திரன் 2016 ஜூலை வரை பதவி வகித்துள்ளார். அதுமட்டுமன்றி, 2016 செப்டம்பர் வரை பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்திற்கான இலாப, நட்ட அறிக்கை அர்ஜுன் அலோஷியஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.

“இதன்படி, 2016 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலப் பகுதியில், 6,813 மில்லியன் ரூபாவை பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது. எனினும் இது ஆணைக்குழு அறிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

“இதனடிப்படையில், மேற்படி மோசடி குறித்த விசாரணையில் மத்திய வங்கி தனது பங்களிப்பைச் சரியாகச் செய்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது. மேலும் பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸிடமிருந்து 11,500 மில்லியன் அன்றி, 18,250 மில்லியன் ரூபாவைப் பெற்றால்தான், நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நட்டம் முழுமையாக ஈடுகட்டப்பட முடியும்.”