ஊழல்வாதிகளுக்கு தண்டனை பெற்றுகொடுத்த பின்னரே நான் ஜனாதிபதி பதவியிலிருந்து இருந்து விலகுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.  ஊழல், குற்றங்கள் இல்லாத ஜனநாயக ரீதியிலான  பயணம் ஒன்றை முன்னெடுக்க மக்களுடன் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Image result for ஜனாதிபதி virakesari

 கொஸ்கம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒன்றுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியுள்ள போதிலும் இந்த நாட்டினை தூய்மையான நாடாக மாற்றியமைக்க அரசியல் கட்சி பாகுபாடு இன்றி செயற்படவேண்டும். நாட்டினை நேசிக்கும் சகல அரசியல் உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து ஊழல், மோசடிகள் இல்லாத ஒரு ஒரு தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நான் தயாராக உள்ளேன். 

இதில் சகல மதத் தலைவர்களும், கல்விமான்கள் மற்றும் நாட்டினை நேசிக்கும் சகல மக்களும் ஒன்றிணைய வேண்டும். நாட்டினை மீண்டும் பின்னோக்கி கொண்டு செல்லாது சரியான திசையில்  கொண்டுசெல்ல நாம் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றபோதிலும் ஒரு சிலர் இந்த நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி அதன் மூலமாக  நாட்டினை சீரழிக்க முயற்சித்து வருகின்றனர். 

மீண்டும் நாட்டில் ஊழல் நிறைந்த ஆட்சியினை உருவாக்கி மக்களை அடிமைப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுக்க   இவர்கள்  மீண்டும் ஆட்சியினை கோரி நிற்கின்றனர். ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட, மக்கள் தண்டிக்கப்பட்ட, மனித உரிமைகள் மீறப்பட்ட ஆட்சியினையே இவர்கள் மீண்டும் உருவாக்க முயற்சித்து வருகின்றனர். 

முன்னைய ஆட்சியின் போது இந்த நாட்டில் இடம்பெற்ற அடக்குமுறைகள் காரணமாகவே சர்வதேச அழுத்தம் ஒன்று உருவாகி எம்மை நசுக்கும் சக்திகள் பலமடைந்தன. எனினும் இன்று நாம் அவற்றில் இருந்து நாட்டினை மீட்டெடுத்து ஜனநாயகத்தை பலப்படுத்தியுள்ளோம். எவ்வாறான நிலையில் மீண்டும் நாட்டினை பின்னோக்கி கொண்டுசென்று  சர்வதேச அழுத்தங்களுக்குள் நாட்டினை தள்ள நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்.

அதேபோன்று  ஊழல் மோசடிகளை செய்த நபர்களை தண்டித்தே தீர்வேன். கடந்தகால ஊழல்வாதிகள் மற்றும் மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்த சகல தரப்பினருக்கும்    ஊழல் வாதிகளுக்கும் தண்டனையினை பெற்றுக்கொடுத்த பின்னரே நான் எனது பதவியை துறப்பேன்.  அத்துடன் ஊழல் இல்லாத நாட்டினை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றினைந்து போராட கைகோர்க்க வேண்டும் என்றார்.