மட்டக்களப்பு பாசிக்குடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் மட்டக்களப்பு பாசிக்குடா பிரதான வீதி சந்தியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கல்குடாவைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான மு.சூரியகுமார் வயது (37)என்பவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும் அதே இடத்தைச் சேர்ந்த ஜே.ஜெயதீபன் வயது (40) என்பவர் படுகயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பாசிக்குடா கடற்கரையில் இருந்து  முச்சக்கரவண்டியில் நண்பருடன் தனது வீடு நோக்கி  சென்று கொண்டிருந்த வேளையில் முச்சக்கரவண்டியானது வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதியைவிட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்துடன்  மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக கல்குடா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜ.பி.ஹேரத் தெரிவித்தார்.