நிதி மோசடியில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணி ஒருவருக்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குருணாகலையைச் சேர்ந்த ஒருவரிடம், ஹோட்டல் ஒன்றை நிர்மாணித்துத் தருவதாகக் கூறி ஒரு இலட்சத்து 850 அமெரிக்க டொலர்களை குறித்த சட்டத்தரணி பெற்றுள்ளார். எனினும் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் குறித்த சட்டத்தரணி மீது வழக்குத் தொடர்ந்தார்.

விசாரணையில், குறித்த சட்டத்தரணி சந்தேகங்களுக்கு இடமற்ற வகையில் குற்றவாளி என நிரூபணமானது. இதையடுத்தே அவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

சிறைத் தண்டனை தவிர, ஐந்து இலட்ச ரூபாவை அபராதமாகச் செலுத்துமாறும் முடியாத பட்சத்தில் மேலதிகமாக 9 மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இவை தவிர, பாதிக்கப்பட்ட நபருக்கு 90 இலட்ச ரூபாவைத் திருப்பியளிக்குமாறும் முடியாத பட்சத்தில் மேலும் ஒன்றரை வருட சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.