சர்வதேச கிரிக்கெட் வருடாந்த விருதுகளை அறிவித்துள்ளது. அதில், 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கு வழங்கப்படும் சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் விருதுக்கு இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 

தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த கசப்பில் இருக்கும் கோலிக்கு நிச்சயம் இது ஒரு இனிப்பான செய்தியாகவே இருக்கும்.

மேற்படி விருதானது ஒருநாள், டெஸ்ட், இ20 ஆகிய அனைத்துப் போட்டிகளிலும் மிளிர்ந்தமையை முன்னிட்டே அவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2017ஆம் ஆண்டு இறுதி வரையான காலப் பகுதியில் திறமை காட்டியவர்களுக்கே இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

குறித்த காலப் பகுதியில் டெஸ்ட் போட்டியில் எட்டு சதங்கள் அடங்கலாக 2,203 ஓட்டங்களையும் ஒரு நாள் போட்டிகளில் ஏழு சதங்கள் அடங்கலாக 1,818 ஓட்டங்களையும் இ20 போட்டிகளில் 299 ஓட்டங்களையும் விராட் கோலி பெற்றுள்ளார்.

அவர் தவிர ஏனைய விருது பெற்றவர்கள் விபரம் வருமாறு:

நடுவருக்கான டேவிட் ஷெப்பர்ட் விருது மராய்ஸ் எராஸ்மஸ்

ஆண்டின் சிறந்த இணை கிரிக்கெட் வீரர் ரஷித் கான்

ஆண்டின் சிறந்த நம்பிக்கை நட்சத்திர வீரர் ஹஸன் அலி (பாகிஸ்தான்)

இ20 போட்டிகளின் சிறந்த வீரர் யுஸ்வேந்திர சாஹல் (இந்தியா)

சிறந்த டெஸ்ட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா)

ரசிகர்களைக் கிளர்ச்சியூட்டிய தருணத்துக்கான விருது பாகிஸ்தான் அணிக்கு வழங்கப்படுகிறது. ஐசிசி சம்பியன் விருது போட்டியில் வெற்றியடைந்தமையை முன்னிட்டு இவ்விருது வழங்கப்படுகிறது.

சிறந்த டெஸ்ட் கனவு அணியாக டியன் எல்கர், டேவிட் வோர்னர், விராட் கோலி (தலைவர்), ஸ்டீவ் ஸ்மித், சட்டீஸ்வர் புஜாரா, பென் ஸ்டோக்ஸ், க்வின்ட்டன் டி கொக், ரவிச்சந்திரன் அஷ்வின், மிட்செல் ஸ்டார்க், காகிஸோ ரபாடா மற்றும் ஜேம்ஸ் அண்டர்சன் ஆகிய வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த ஒருநாள் கனவு அணியாக டேவிட் வோர்னர், ரோஹித் ஷர்மா, விராட் கோலி (தலைவர்), பாபர் அஸாம், ஏபி டி வில்லியர்ஸ், க்வின்ட்டன் டி கொக், பென் ஸ்டோக்ஸ், ட்ரென்ட் போல்ட், ஹஸன் அலி, ரஷீத் கான் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா  ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.