பிணைமுறி விவகாரத்தில் சிக்கியுள்ள ‘பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ்’ நிறுவனத்தினதும் மற்றும் அதன் துணை நிறுவனங்களினதும் சொத்துக்களை முடக்குமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பிணைமுறி விசாரணை அறிக்கையில், பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோஷியஸ் மற்றும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் மீது சட்டமா அதிபர் குற்ற வழக்கு ஒன்றைப் பதிவுசெய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தவிர, முறையற்ற விதத்தில் பிணைகளை வழங்கியதில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் தார்மீகப் பொறுப்பேற்கவேண்டும் என்றும் இதனால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டும் வகையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று (17) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின், பிணைமுறி தொடர்பான ஆணைக்குழு விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கும் எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் வசதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் மத்திய வங்கி ஆளுனர், சட்டமா அதிபர், இலஞ்ச ஊழல் குறிதது ஆராயும் திணைக்களத்தின் இயக்குனர் நாயகம் மற்றும் சில உயரதிகாரிகள் பங்கேற்றனர்.