இன்றைய திகதியில் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளே தொப்பையுடன் இருக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. உணவு முறையில் மாற்றம், உணவை சாப்பிடும் நேரங்களில் மாற்றம். சாப்பிடும் அளவிலும், சாப்பிடும் எண்ணிக்கையிலும் மாற்றம் என சில காரணங்களால் கொழுப்பு எனப்படும் கொலஸ்ட்ரால் இயல்பை விட அதிகளவில் சேமிக்கப்படுவதால் தொப்பை உருவாகிறது.

எம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் இயங்குவதற்கு கொலஸ்ட்ராஸ் எனப்படும் கொழுப்பு அவசியம் தேவை. அதே போல் விற்றமின் டி எனப்படும் ஊட்டச்சத்து கிடைப்பதற்கும் எமக்கு கொழுப்பு தேவைப்படுகிறது. இந்நிலையில் எம்முடைய உடலில் இருக்கும் கல்லீரல் என்ற உள்ளுறுப்பே கொழுப்பை உற்பத்தி செய்கிறது. அத்துடன் நாம் சாப்பிடும் அசைவ உணவு வகைகளிலிருந்து கொழுப்பானது நேரடியாக கிடைக்கிறது. அதேபோல் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டாலும் கொழுப்பு கிடைக்கிறது. 

இதனிடையே எம்முடைய தேவையைக் கடந்து கொழுப்பானது அதிகளவில் உற்பத்தியாகிவிட்டால், அவை இரத்த குழாய்களின் சுவர்களில் தேக்கமடைந்து படிய தொடங்கிவிடுகிறது. நாளடைவில் இரத்த குழாய்களை சுருக்கமடையச் செய்து அடைப்பை உருவாக்கிவிடுகிறது. இதன்போது எமக்கு உயர்குருதி அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் பலவித ஆரோக்கிய கேடுகள் அறிமுகமாகிறது.

இதனை லிப்பிட் புரொபைல் என்ற பரிசோதனைகளை 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் செய்து கொள்ளவேண்டும். இதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பு குறித்த விவரங்களை அறிந்துகொள்ளமுடியும். உயரத்திற்கேற்ற எடையைப் போல அதாவது பி எம் ஐ போல, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்வதைப் போல், இரத்த அழுத்தத்தின் அளவை தெரிந்துகொள்வதைப் போல, உடலிலுள்ள கொழுப்பின் அளவையும் தெரிந்துகொள்ளவேண்டும். இதில் கெட்டக் கொழுப்பின் அளவையும். நல்ல கொழுப்பின் அளவையும் தெரிந்துகொண்டு, இரண்டையும் சமமான அளவை பராமரிக்கவேண்டும். அப்போது தான் ஆரோக்கியமாக இருக்கலாம். அதே சமயத்தில் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றை மனதில் கொண்டு வாழ்க்கை நடைமுறையை மாற்றியமைத்துக் கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காது. தொப்பையும் ஏற்படாது.

டொக்டர் மதன் கோபால்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்