ஆடைக் கண்காட்சி ஒன்று நடைபெற்றுள்ளது. வித்தியாசம் என்ன என்று கேட்கிறீர்களா? இங்கு காட்சிப்படுத்தப்பட்ட ஆடைகள் அனைத்தும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள், சம்பவ நேரத்தில் அணிந்திருந்த ஆடைகள்!

லீஸ்பெத் கென்னஸ் என்ற பெண்ணே இந்தக் கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தவர். இக்கண்காட்சிக்காக, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் அமைப்புகள் மூலமே இந்த ஆடைகளைச் சேகரித்துள்ளார்.

‘அது என் தவறா?’ என்ற தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்தக் கண்காட்சியில் பெண்கள் பெருவாரியாகக் கலந்துகொண்டனர்.

“ஒரு பெண் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டால், அவர் அணிந்திருக்கும் ஆடைகளைக் குறைசொல்பவர்களே அதிகம். ஆனால், இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஆடைகளைப் பாருங்கள். மிகச் சாதாரணமாக, எப்போதும் யார் வேண்டுமானாலும் அணியக் கூடிய ஆடைகளே இவை. இவற்றுள், குதிரைப் படம் வரைந்த சிறு குழந்தையின் மேலாடை ஒன்றும் இருக்கிறது. அதில் எதைக் கண்டு காமுற்றான் அவளைச் சிதைத்த கயவன்?” என்று கேள்வியெழுப்புகிறார் கென்னஸ்!