ரொஹிங்யா முஸ்லிம்களை, வாரமொன்றுக்கு ஆயிரத்து ஐந்நூறு பேர் வீதம் மீளப் பெற்றுக்கொள்ள மியன்மார் சம்மதம் தெரிவித்துள்ளது.

மியன்மாரில், ரொஹிங்யா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ராக்கைன் மாகாணத்தில், கடந்த இரண்டு வருடங்களாக உள்நாட்டுக் கலவம் இடம்பெற்று வந்தது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெவ்வேறு நாடுகளுக்கு ரொஹிங்யாக்கள் இடம்பெயர்ந்தனர்.

அதன்படி, பங்களாதேஷில் மட்டும் சுமார் ஏழரை இலட்சம் ரொஹிங்யாக்கள் அடைக்கலம் புகுந்தனர். இவர்களை, அடுத்த இரண்டு வருடங்களுக்குள் மியன்மாருக்குத் திருப்பியனுப்பும் வகையில் இரு நாடுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இதன்படி, வாரம் ஒன்றுக்கு ஆயிரத்து ஐந்நூறு ரொஹிங்யாக்கள் பங்களாதேஷில் இருந்து தமது சொந்த நாடான மியன்மாருக்குத் திரும்பிச் செல்லவிருக்கிறார்கள்.

எனினும் மியன்மாரில் தமது நிலை என்னவாகும் என்ற அச்சம் ரொஹிங்யாக்களை விட்டு நீங்கவில்லை என்று தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.