தமது பதின்மூன்று பிள்ளைகள் மீது எவ்வித அக்கறையும் இன்றி, அவர்களை சித்திரவதைக்கு உள்ளாக்கி வைத்திருந்த தம்பதியரை அமெரிக்க பொலிஸார் கைது செய்தனர்.

கலிஃபோர்னியா பொலிஸாருக்கு கடந்த ஞாயிறன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், தன்னை பதினேழு வயதுப் பெண் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட குரல், தன்னையும் தனது கூடப்பிறந்தவர்கள் பன்னிரண்டு பேரையும் தமது பெற்றோரே சிறைவைத்திருப்பதாகத் தெரிவித்தது.

அதிர்ச்சியடைந்த பொலிஸார், அத்தகவல் பொய்யாக இருக்கலாம் என்று எண்ணினர். எனினும் குறித்த முகவரிக்குச் சென்று பார்ப்பதால் எவ்வித நட்டமும் தமக்கு ஏற்படப்போவதில்லை என்று எண்ணி, தொலைபேசிக் குரல் குறிப்பிட்ட முகவரிக்குச் சென்றனர்.

அங்கே, குப்பையும் கூளமும் நிறைந்த நாற்றமெடுக்கும் அலங்கோலமான வீட்டில், இரண்டு முதல் 29 வயது வரையான பதின்மூன்று பேர் கட்டில்களில் இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.

அவர்கள் அனைவருமே தகுந்த பராமரிப்பின்றி, போதிய உணவின்றி பட்டினியில் நலிந்துபோய்க் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில், அவர்களது பெற்றோர் டெக்ஸாஸில் பாடசாலை ஒன்றை நடத்திவந்ததாகவும் அது நட்டமடையவே கலிஃபோர்னியாவுக்கு குடிபெயர்ந்து வந்ததாகவும் தெரியவந்தது.

கிடைத்த தகவல்கள் அடிப்படையில், அந்தக் குழந்தைகளின் பெற்றோரான டேவிட் அலன் டேர்ப்பின் (57), லூஸி அன்னா டேர்ப்பின் (49) ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேக நபர்களான இருவரும் தலா ஒன்பது மில்லியன் டொலர் பிணையில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

நன்கு கற்றறிந்தவர்களாக இருந்தும் தமது குழந்தைகளை ஏன் இவ்வாறு கேவலமாக நடத்தினர் என்பது குறித்து உடனடியாக தகவல் எதையும் பெறமுடியவில்லை என ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.