(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்) 

சட்டவிரோத சிறுநீரக சர்ச்சைகளுடன் தொடர்புடைய நீண்டகால நட்புறவு நாடுகளான  இலங்கையும் - இந்தியாவும் இராஜதந்திரமான பேச்சுவார்த்தை மூலமாகவே நிரந்தர  தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசீம் தெரிவித்தார். 

சட்டவிரோத சிறுநீரக வியாபாரம் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர திசாநாயக்க  23/2 ஆம் இலக்க  நிலையியற் கட்டளையின் கீழ் கேள்வியெழுப்பியிருந்தார். இதன்போது பதிலளிக்கையிலே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அநுரகுமார எம்.பி.

சட்டவிரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக இந்தியாவினால் வெளியிடப்பட்ட தகவல்களுக்கு அமைவாக இலங்கையின்  நான்கு தனியார் வைத்தியசாலைகளைச் சேர்ந்த ஆறு வைத்தியர்கள் தொடர்புபட்டுள்ளனர்.  இவ்வாறான செயற்பாடுகல் இலங்கைச் சுகாதார சேவையில் கறுப்பு புள்ளியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம்  தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கடந்த 5 ஆம் திகதி  அறிக்கை சமர்ப்பித்ததாகவும் அறிந்தோம். எனினும் அதில் கூறப்பட்ட விடயங்கள் என்ன என்பது தொடர்பில் எந்தவிதமான தகவல்களுமில்லை.  அதிலுள்ள  விடயங்கள்  என்ன?

மலையகத்தில் காணப்படும் பொருளாதார பிரச்சினையை பயன்படுத்தியே இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.  இவ்வாறான நடவடிக்கைகள் தொடருமானால் எதிர்காலத்தில் வீதியில் செல்பவர்களையே கடத்திச் சென்று உடல்  உறுப்புகளை  விற்கும்  நிலை ஏற்பட்டலாம். ஆகவே இதனை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு  அரசாங்கம் மேற்கொண்டுள்ள குறுகியகால நடவடிக்கைகள் என்ன? அதேபோன்று  நிரந்தரமாக தடுப்பதற்கு மேற்கொண்ட நீண்டகால நடவடிக்கைகள் என்ன? என வினவினார்? 

இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர்  பைசல் காசீம்,  சட்டவிரோதமான  சிறுநீரக வியாபாரம் மோசடிகள் குறித்த விசாரணை அறிக்கை எமக்கு கிடைத்துள்ளது. அது குறித்த சில விடயம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  அதில் காணப்படும் குறைபாடுகள்  குறித்தும் ஆராய்ந்து பார்க்கப்படுகின்றன. அவ்வாறான நிலையில் அவ்வறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாதுள்ளது. 

1987 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க ஒழுக்க விதிகள் காணப்படுகின்ற போதும்,  மறுசீரமைப்புக்கள் சில மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அதேநேரம்  இந்த விவகாரத்தில்  நீண்டகால வரலாற்று உறவுகளைக் கொண்ட இந்தியாவும்  இலங்கையும் தொடர்புபட்டுள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பாக இரு நாடுகளுக்கிடையில் இராஜதந்திர ரீதியான முறையில் பேச்சுவார்த்தைகள்  மேற்கொள்ளப்பட்டு நிரந்தரமான தீர்வு எடுக்கப்படுவது அவசியம் என்றார்.