(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவி காலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கும் அபிப்பிராயம் எஞ்சிய இருவருட காலத்திற்கும் அவர் அரசியல் ரீதியில் பலவீனப்பட்ட ஒரு ஜனாதிபதியாக இருக்க வேண்டிய நிலையை உருவாக்கிவிடக் கூடும் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

2015 ஆம் ஆண்டு ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்று ஏற்கனவே மூன்று வருடங்களை பூர்த்தி செய்திருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலமாக ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களில் இருந்து 5 வருடங்களாக குறைக்கப்பட்டதையடுத்து மேலும் எத்தனை வருடங்களுக்கு தன்னால் பதவியில் இருக்க முடியும் என்ற தெளிவற்ற நிலை இருப்பதாக கருதியதனால் கடந்த வாரம் தனது பதவி காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்திடம் அபிப்பிராயத்தை கோரியிருந்தார்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற வேளையில் நடைமுறையில் இருந்த ஜனாதிபதி பதவிக் காலம் தொடர்பான அரசியலமைப்பு ஏற்பாட்டின் பிரகாரம் ஜனாதிபதி சிறிசேன  6 வருடங்களுக்கு அதாவது 2021 ஆம் ஆண்டு ஜனவரி வரையில் பதவியில் இருக்க முடியுமா அல்லது 2015 ஏப்ரலில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பிற்கான 19 ஆவது திருத்தத்தில் 5 வருடங்களுக்காக குறைக்கப்பட்டதன் பிரகாரம் அவர் 2020 ஆம் ஆண்டு ஜனவரி வரை தான் பதவியில் இருக்க முடியுமா என்பதே கேள்வியாக இருந்தது. இதையே ஜனாதிபதி தெளிவற்ற பதவி நிலை என்று வர்ணித்திருந்தார்.

ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளை கொண்ட அமர்வில் கடந்த வியாழக்கிழமை விசாரணை இடம்பெற்ற போது சட்டமாதிபர் ஜயந்த ஜயசூரிய , ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற வேளையில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பின் பிரகாரம் மக்கள் ஜனாதிபதி சிறிசேனவை 6 வருடங்களுக்கு பதவியில் இருக்கவே தெரிவு செய்தனர் என்றும் இதற்கு அமைவாக அவர் 6 வருடங்களுக்கு பதவியை தொடர முடியும் என்றும் வாதிட்டார்.

ஆனால் ஐந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 5 வருடங்களே என்று தங்களது ஏகோபித்த அபிப்பிராயத்தை நேற்று முன்தினம் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி விட்டனர்.

அதனால் 2020 ஜனவரி 9 ஆம் திகதி வரையே ஜனாதிபதி சிறிசேன பதவியில் இருக்க முடியும் என்பது எவ்விதமான சந்தேகத்திற்குமிடமிமன்றி உறுதியாகி விட்டது. 2015 ஜனவரி 9 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதியாக பதவியேற்ற மறுகணமே மைத்திரிபால சிறிசேன இனிமேல் இன்னொரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று முழு நாட்டிற்குமே பிரகடனம் செய்தார். ஆனாலும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தங்களது வேட்பாளர் அவரே என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் அடிக்கடி கூறி வந்த போதெல்லாம் ஜனாதிபதி சிறிசேன எதுவும் மறுத்துக் கூறாது மௌனத்தையே சாதித்து வந்திருக்கின்றார்.

அதனால் , அவர் இன்னும் இருவருடங்களுக்கு மாத்திரமே ஜனாதிபதியாக பதவியில் இருந்து விட்டு ஓய்வு பெறுவாரா அல்லது மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்து தெளிவற்ற ஒரு நிலை நிலவுகின்றது. நாட்டு மக்களுக்கு உறுதியளித்தன் பிரகாரம் மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாதிருக்க அவர் தீர்மானிப்பாராயின் 2020 ஜனவரி வரை தான் அதாவது இன்னும் 2 வருடங்களுக்கே பதவியில் இருப்பார்.

இரு வருடங்களில் பதவியிலிருந்து விலகப்போகும் ஒரு ஜனாதிபதிக்கு அவரின் கட்சியினர் எவ்வளவு காலத்திற்கு விசுவாசமானவர்களாக இருப்பர் என்ற கேள்வி எழுகின்றது. ஜனாதிபதி சிறிசேன அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று தனது கட்சியினருக்கு கூறும் பட்சத்தில் அவர்கள் தங்களது அரசியல் எதிர்காலம் கருதி வேறு ஒரு தலைவரின் பின்னால் அணித்திரளக்கூடிய சாத்திய கூறுகள் தாராளமாக உண்டு. சுதந்திரக் கட்சிக்குள் நாடளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளதக்க வேறு தலைவர் இல்லாத நிலையில் அவர்கள் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர்கள் பக்கம் சாயக்கூடிய சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை.

சுதந்திர கட்சியுடன் சேர்ந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்திருக்கும் ஐக்கிய தேசிய கட்சி கடந்த மூன்று வருடகாலமாக பலவிதமான முரண்பாடுகளுக்கு மத்தியிலும் அரசியல் சகவாழ்வை சமாளித்து தொடர்ந்தது போன்று எஞ்சிய இரு வருடங்களுக்கும் செய்யுமா என்றும் ஆய்வாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

இரு வருடங்களுக்கு பிறகு ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக களமிறக்குவதில் ஐக்கிய தேசிய கட்சியினர் மும்முரமாக செயற்படுவர். அதனால் ஜனாதிபதி சிறிசேன அரசியல் ரீதியில் உறுதியாக செயற்பட முடியாத ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருவருடங்களை கடத்த வேண்டியிருக்கும் என்று அவதானிகள் அபிப்பிராம் கூறுகின்றனர்.