கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் இருந்து கடத்தி காணாமல் ஆக்­கப்­பட்ட 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரின் விவ­காரம் தொடர்பில் கடற்­ப­டையின் புல­னாய்வு பிரிவின் சிப்பாய் ஒருவர் நேற்று கைது­செய்­யப்­பட்­டுள்ளார். 

குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் கூட்டு கொள்ளை தொடர்­பி­லான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் நிலையில் இன்று கோட்டை நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தா­கவும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்குத் தெரி­வித்தார்.

கடத்­தப்­பட்ட 11 பேர் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக சந்­தே­கிக்­கப்­படும் திரு­கோ­ண­மலை கடற்­படை முகாமின் கன்சைட் எனும் நிலத்­தடி சித்­தி­ர­வதை கூடத்­திற்கு அருகில் கறுப்பு நிற பொலித்­தீ­னினால் சுற்­றப்­பட்ட சட­லங்கள் என சந்­தே­கிக்­கப்ப­டு­வ­ன­வற்றை கெப் வாக­ன­மொன்றில் ஏற்றிச் சென்­றதை அவ­தா­னித்­த­தாக இவ்­வி­வ­கா­ரத்தின் பிர­தான சாட்­சி­யாளர் லெட்­டினன் கெமாண்டர் சீ.கே.வெல­கெ­தர குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வுக்கு வாக்­கு­மூலம் அளித்­தி­ருந்தார். இந்­நி­லையில் சட­லங்கள் என சந்­தே­கிக்­கப்­படும் கறுப்பு பொலித்­தீனால் சுற்­றப்­பட்­ட­வற்றை கெப் வாக­னத்தில் ஏற்­றி­ய­தாகக் கூறப்­படும் காமினி எனப்­படும் கடற்­படை சிப்­பாயே நேற்று இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வு பிரிவின் குறித்த உயர் அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரவி­செ­ன­வி­ரத்ன, பிரதி பொலிஸ்மா அதிபர்  சுதத் நாக­முல்ல, பணிப்­பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­கர ஆகி­யோரின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் திசே­ராவின் வழி­ந­டத்­தலில் கூட்­டுக்­கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணை பிரிவின் பொறுப்­ப­தி­காரி பரி­சோ­தகர் நிசாந்த சில்வா தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­னரே சந்­தேக நபரை கைது செய்­துள்­ளனர்.

2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் இருந்து ரஜீவ் நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன், டிலான், சாஜித் ஆகிய 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் வெவ்­வேறு தினங்­களில்  வெள்ளை வேனில் வந்­தோரால் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இவர்கள் கொழும்பு சைத்­திய வீதியில் உள்ள  கடற்­படை வளா­கத்தில் தடுத்து வைக்­கப்­பட்ட பின்னர் திரு­மலை கடற்­படை முகாமின் கன்சைட் சித்­தி­ர­வதை கூடத்தில் அடைத்து வைக்­கப்­பட்டு கப்பம் கோரப்­பட்­டமை விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது. 

அதன்­படி விசா­ரணை செய்து வரும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் ஏற்­க­னவே கடற்­ப­டையின் முன்னாள் ஊடகப் பேச்­சாளர் கொமாண்டர் டி.கே.பி.தஸாநாயக்க உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர் அவர்கள் கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே தற்போது 8ஆவது சந்தேக நபராக மற்றொருவர் கைதாகியுள்ளனர். 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.