தாய்லாந்தின் பை பை தீவில் அதிவேகப் படகொன்று திடீரென்று வெடித்ததில் 16 பேர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பூகேட் தீவிலிருந்து பை பை தீவுக்கு சென்று கொண்டிருந்த குறித்த அதிவேகப்படகின் இயந்திரம் திடீரென்று  தீப்பிடித்ததைத் தொடர்ந்து படகு வெடித்துள்ளது.

குறித்த அதிவேகப்படகில் 31 பயணிகள் இருந்துள்ளனர். இவர்களில் சீனாவைச் சேர்ந்த 27 சுற்றுலாப் பயணிகள் அடங்குகின்றனர்.

14 சுற்றுலாப் பயணிகளும் 2 மாலுமிகளும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பெருமளவானோர் அடங்குகின்றனர்.

காயமடைந்தவர்களில் சிலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டு திரும்பியுள்ளதோடு சிலர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் இதுவரையில் அறியப்படாத நிலையில் அந் நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளது.