சமூக வலைத்தளமான பேஸ்புக்கில்  'நியூஸ் ஃபீட்' செயல்படும் விதத்தில் பெரும் மாற்றங்களை கொண்டுவர திட்டுமிட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைமை செயல்பாட்டு அதிகாரியுமான மார்க் ஷக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மார்க் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

பேஸ்புக் சமூவலைத்தளத்தை பயன்படுத்தும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்குகிடையில் உரையாடல்களை உருவாக்கும் பதிவுகளுக்கு எதிர்காலத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மக்களை இணைக்க உதவுவதற்கும் எங்களுக்கு முக்கியத்துவம் தருகின்ற மக்களுடன் நெருக்கமாக இணைந்து கொள்வதற்குமே பேஸ்புக்கை நாங்கள் உருவாக்கினோம்.

அதனால் தான் நாம் எப்போதும் எமது அனுபவத்தின் மையத்தில் நண்பர்களையும் குடும்பங்களையும்  வைத்துள்ளோம். 

உறவுகளை பலப்படுத்துவதானது எமது நல்வாழ்வு மற்றும் மகிழ்ச்சியை மேம்படுத்துகிறது என எமது கடந்த கால ஆய்வுகள் வெளிக்காட்டுகின்றன.

இதேவேளை, வர்த்தக நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களின் பிராண்ட்கள் மற்றும் ஊடகங்களின் பதிவுகள் குவிந்து ஒவ்வொரு தனிநபர்களையும்  இணைப்பதற்கு வழி செய்யும் தருணங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனையும் எமது ஆய்வுகளில் இருந்து தெளிவாக பெற்றுள்ளோம்.

மக்களின் ஆரோக்கியமான வாழ்வை வளர்ப்பதற்கு பேஸ்புக் மிகவும் சிறப்பாக செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்புணர்வை நானும் எனது குழுவினரும் உணர்ந்துள்ளோம்.

பொது மக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டுமெனில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளை பற்றி நெருங்கிய தொடர்புடைய குழுக்களுக்கு மத்தியில் கலந்துரையாடல் நடைபெறுவதைப்போல இந்த கருத்துக்கள் சமூக ஊடாடலை தூண்டுவதாக இருக்க வேண்டும்.

இத்தகைய மாற்றங்களை உருவாக்குவதன் மூலம், மக்கள், பேஸ்புக் பக்கத்தில் செலவிடும் நேரம் மற்றும் இந்த சமூவலைதளத்தில் ஈடுபடும் அளவும் குறையும். ஆனால் பேஸ்புக் பக்கத்தில் மக்கள் செலவிடும் நேரம் அதிக மதிப்புடையதாக இருக்குமென நான் எதிர்பார்க்கிறேன்.

பேஸ்புக் சமூவலைத்தள பயன்பாட்டாளர்களை துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பது மற்றும் பேஸ்புக் சமூவலைத்தளத்தில் செலவிடப்படும் நேரம் சிறப்பானதாக செலவிடப்படுவதை உறுதி செய்ய விரும்புகின்றேன்.

உலகத்திலுள்ள தேசிய அரசுகளிடம் இருந்து பேஸ்புக்கை தற்காத்துகொள்ளவும் நான் உறுதியளிக்கின்றேன் என அவர் தனது உத்தியோகபூர்வ பக்கத்தில் குறிப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அடுத்து வருகின்ற வாரங்களில், இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. இதன் மூலம் வர்த்தக நிறுவனங்கள், பிராண்டுகள் மற்றும் ஊடகங்களின் பதிவுகளுக்கு மிகவும் குறைவான முக்கியத்துவம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் விளைவாக, பேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் தங்களுடைய பதிவுகளின் முக்கியத்துவம் குறைவதை அவதானிக்க முடியும்.

குறிப்பாக செய்தி நிறுவனங்களை இது பெரிதாக பாதிக்கப்போகின்றதாக பெரும்பாலானோர் மார்கின் பேஸ்புக் பதிவிற்கு கருத்துவெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் மார்க் தனது கொள்கையில் உறுதியாகவுள்ளார் என்பது தெளிவு.