இந்திய வம்சாவளி மக்கள் என்ற அடையாளத்தை நாம் இழப்போமானால் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இன்று இந்திய வம்சாவளி மக்களை எவ்வாறு அழைப்பது என்ற சர்ச்சை உருவாகியுள்ளது. அவர்களை மலையக மக்கள் என்று அழைக்க வேண்டும் என்று ஒரு சாரார் வலியுறுத்தி வருகின்றனர். 

ஆனால் இந்திய வம்சாவளி மக்கள் என்ற அடையாளத்தை நாம் இழப்போமானால் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

வடகிழக்கிலே வாழும் தமிழ் மக்கள் தங்களை இலங்கை தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். 

இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக வாழ்ந்து வருகின்றார்கள். மலையகத்தை தவிர்த்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல் போன்ற ஏனைய பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களை மலையக மக்கள் என்று குறிப்பிடுவது பொருத்தமாக இல்லை.

மேற்குலக நாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களை இந்திய வம்சாவளி என்று பெருமையாக அழைத்துக் கொள்கின்றார்கள். அதே போல் மலேசிய தமிழர்களும் தங்களை இந்திய வம்சாவளி தமிழர்கள் என்றே அழைக்கிறார்கள். 

இந்திய வம்சாவளி என்ற அடைமொழியுடன் நாம் இருப்போமேயானால் தான் தெற்காசியாவில் பலம் மிக்க வல்லரசான இந்தியாவின் உதவிகளை என்றும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். 

இன்று தேசிய கீதம் தமிழில் பாடியதை வெகுவாக பாராட்டும் நல்லாட்சியை சேர்ந்த தமிழ் தலைமைகள், இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுவிட்டதைப் போன்று ஒரு மாயையை உருவாக்கி வருகின்றார்கள். 

நம் நாட்டில் ஒரு தேசிய கீதமே இருக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும். ஏற்கெனவே இருக்கும் சிங்கள மொழியிலான தேசிய கீதத்தில் தமிழ் பேசும் மக்களாகிய எங்களது விகிதாசாரபடி 25 வீதம் தமிழ் சொற்களை உள்வாங்குவதன் மூலமாகவே இன ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும். அவ்வாறு இடம்பெறுமாயின் தமிழ் மொழியிலான வசனங்களை இந்நாட்டில் வாழும் ஒரு கோடியே அறுபது இலட்சம் சிங்கள மக்கள் படிக்க வேண்டி வரும். இதுவே இன ஐக்கியத்தை உருவாக்கக் கூடியதாக அமையும். 

எமது தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வினை தாமதப்படுத்துவதற்காக அழும் பிள்ளைக்கு மிட்டாய் கொடுப்பது போல் தமிழில் தேசிய கீதத்தை சுதந்திர தினத்தில் சித்திரிக்கின்றார்கள். 

உண்மையில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற நிலைபாடு இருக்குமேயானால் இனி வரும் அனைத்து அரச விழாக்களிலும் தமிழ் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.