இரகசியமாக அனுப்பப்பட்ட விண்கலம் ஒன்று காணாமல் போனதாக எழுந்துள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஆரம்பம் முதலே இந்த விண்கலம் மர்மங்கள் நிறைந்ததாகவே இருந்தது. ‘ஸுமா’ என்று மட்டுமே அடையாளப்படுத்தப்படும் இந்த விண்கலத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த ஞாயிறன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

விண்கலம் செலுத்தப்படும் நேரம் அதன் நேரடி காணொளியை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முடக்கியது. இதனால், ஸுமாவின் திறன் மற்றும் எங்கு - எத்திசையில் அது அனுப்பப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் உலகுக்கு அறிவிக்கப்படவில்லை.

மேலும் என்ன தேவைக்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டது என்பது குறித்தும் தீர்மானமான எவ்வித பதிலையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவிக்கவில்லை.

ஏவப்பட்ட மறுதினமான திங்களன்றே ஸுமா செயலிழந்துவிட்டதாக தகவல்கள் கிளம்பின. இதை உடனடியாக மறுத்த ஸ்பேஸ் எக்ஸ், ஸுமாவைச் சுமந்து சென்ற ‘ஃபோல்கன் 9’ என்ற ரொக்கெட் திறம்பட இயங்கியதாகத் தெரிவித்தது.

எனினும் மறுதினம் செவ்வாயன்று மற்றொரு அறிவிப்பை வெளியிட்ட ஸ்பேஸ் எக்ஸ், ஞாயிறு இரவு வரை ஃபோல்கன் 9 ரொக்கட் சீராக இயங்கியதாகவும் ஸுமா குறித்து தகவல்களைத் தாம் திரட்டிக்கொண்டிருப்பதாகவும் அவை கிடைத்ததும் அறிவிப்பதாகவும் குறிப்பிட்டது.

எனினும் இதுவரை ஸுமா பற்றிய எந்த அறிவிப்பும் ஸ்பேஸ் எக்ஸிடம் இருந்து வெளிவரவில்லை.