சென்னை தமிழர்கள் கொண்டாடிய போகிப் புகையால், சென்னை விமான நிலையத்தின் இயக்கம் ஐந்து மணிநேரம் நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் சிரமங்களுக்கு ஆளாயினர்.

தமிழகத்தில், தைப்பொங்கலுக்கு முதல்நாள் போகிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கம். அதன்படி இன்று அதிகாலை முதல், மக்கள் தமது வீட்டில் உள்ள பழைய பாய், தலையணை, ஆடைகள் எனப் பல்வேறு வஸ்துக்களை இட்டுத் தீமூட்டத் தொடங்கினர்.

சென்னை, மீனம்பாக்கம் பகுதியைச் சுற்றிலுமுள்ள மக்களும் போகி கொண்டாடத் தொடங்கவே, அப்பகுதி முழுவதும் புகை கிளம்பத் தொடங்கியது. ஏற்கனவே பனிப் புகாரும் கண்களை மறைக்கும் நிலையில், போகிப்புகையும் சேர்ந்து ஐம்பது மீற்றர்களுக்கு அப்பால் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய சுமார் பத்து விமானங்கள் திசை திருப்பப்பட்டன. அதேபோல், சென்னையில் இருந்து புறப்படவிருந்த பத்து விமானங்கள் ஐந்து மணிநேரம் தாமதமாகவே இயக்கப்பட்டன. 

இந்தத் திடீர் தாமதத்தால், குறித்த நேரத்துக்கு குறித்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் உள்ளூர், வெளிநாட்டுப் பயணிகள் தடுமாற்றம் அடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.