திஸ்ஸ மஹாராமையில், பதினான்கு வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மூன்று இளைஞர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் காதலரும் அவரது நண்பர்கள் இருவரும் சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். இதனால் விரக்திக்குள்ளான அச்சிறுமி, தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

எதேச்சையாக அதைக் கண்ட சிறுமியின் சகோதரன் பெற்றோரிடம் தெரிவித்ததால் சிறுமி காப்பாற்றப்பட்டார்.

தற்கொலை முயற்சிக்கு முன் சிறுமி எழுதி வைத்திருந்த கடிதம் பெற்றோருக்குக் கிடைத்தது. அதில், தன்னை வல்லுறவுக்கு உட்படுத்திய மூவர் பற்றிய அடையாளங்களை அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், யால காட்டுப் பகுதியில் ஒளிந்திருந்த மூன்று சந்தேக நபர்களையும் பிரதேச வாசிகள் கண்டுபிடித்து சரமாரியாகத் தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த மூன்று இளைஞர்களும் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பதினெட்டு, இருபது மற்றும் இருபத்து மூன்று வயது நிறைந்த இம்மூன்று பேரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.