தாதியர் பிரதிநிதிகள் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகளுக்கிடையில், இன்று (12) நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்ததையடுத்து, ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடந்த பத்து நாட்களாக தாதியர் நடத்தி வந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையின்போது, தாதியரின் வரவுப் பதிவுக்காக அறிமுகப்படுத்தப்படத் திட்டமிடப்பட்டிருந்த விரல் ரேகைப் பதிவு இயந்திரங்களை அமுல்படுத்துவதில்லை என, வைத்தியசாலை நிர்வாகம் தற்காலிகமாக முடிவெடுத்தது.

இதையடுத்தே தாதியர் தம் வேலை நிறுத்தத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

இது தவிர, ஏனைய பிரச்சினைகள் குறித்து அமைச்சரவை மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தித் தீர்வு காண்பது எனவும் முடிவாகியுள்ளது.

முன்னதாக, இவ்வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு கண் வைத்தியசாலை ஆகியவற்றைச் சேர்ந்த தாதியரும் நேற்று (11) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் இறங்கியிருந்தனர்.